இந்திய தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகாமல் இருப்பதற்காக டிடிவி தினகரன் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார்.
இது தொடர்பாக சுகேஷ் என்பவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தினகரன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இதனால் தினகரனை விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக டெல்லி பொலிசார் தமிழகம் விரைந்துள்ளனர்.
இதனால் பதற்றமடைந்த தினகரன், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க சென்றிருந்தார். ஆனால் சசிகலாவோ தினகரனை பார்ப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தினகரன் அங்கே உள்ள ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளார்.
அதன் பின் ஹோட்டலை விட்டு வெளியே சென்ற தினகரன் எங்கே போனார் என தெரியவில்லை என கூறப்படுகிறது.
அதிமுக நிர்வாகிகள் தினகரனை வழக்கமாக தொடர்பு கொள்ளும் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இதனால் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப தினகரன் தலைமறைவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்வது தொடர்பாக தமது வழக்கறிஞர்களுடன் தினகரன் ரகசிய இடத்தில் ஆலோசனை நடத்தி வரலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.







