தேசிய சுதந்திர முன்னணியின் தீர்மானமிக்க அரசியல் குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அந்த கட்சியின் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த கட்சியின் அரசியல் குழுவை சேர்ந்த 17 பேர் கொண்டவர்களே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
விமல் வீரவன்ச தனக்கு பிணை வழங்க வேண்டும் என கோரி விளக்கமறியலினுள் உண்ணாவிரதம் இருந்தமை மற்றும் அதனை முடித்துக் கொண்டமை தொடர்பில் அந்த கட்சியின் அரசியல் குழுவின் பெரும்பான்மையினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இந்த செயலினால் கட்சிக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. இந்த கட்சி மக்கள் மத்தியில் நகைச்சுவைக்கு உள்ளாகியுள்ளதாக என்பது அந்த கட்சியின் பிரதான செயலாளர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களின் கருத்தாகும்.
விமல் வீரவன்ச உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் கட்சியில் இது தொடர்பில் அறிவிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விமல் பிணையில் விடுதலையாகி வீட்டிற்கு சென்றதன் பின்னர் இதுவரையில் அமைதியாக இருப்பதனால் கட்சியின் அரசியல் குழுவுக்குள் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலைமையினுள் 19ஆம் திகதி இடம்பெறவுள்ள அரசியல் கூட்டம், அந்த கட்சியின் தலைவரான விமல் வீரவன்சவின் அரசியல் எதிர்காலத்திற்கும் இந்த கட்சியை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது தொடர்பிலும் தீர்மானமிக்கதாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விமல் வீரவன்சவின் அரசியல் செயற்பாடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் கூட்டு எதிர்கட்சி தலைவர் தினேஷ் குணவர்தனவின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






