நடிகைகளை பார்த்து பொறாமைப்பட மாட்டேன்: தமன்னா

நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-

“சினிமாவில் அறிமுகமானபோது எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க என்னை தயார்படுத்திக் கொண்டேன். பிடித்த கதாபாத்திரம் பிடிக்காத கதாபாத்திரம் என்றெல்லாம் வேறுபடுத்தியது இல்லை. ஒரு நடிகருக்கோ நடிகைக்கோ எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க திறமை இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும்.

எனக்கு பிடித்த கதை, கதாபாத்திரங்கள் அமையவில்லை என்று சில நடிகைகள் குறை சொல்லிக்கொண்டு இருப்பது அறியாமை என்றுதான் நான் கூறுவேன். கிடைத்ததை தனக்கு பிடித்த மாதிரி மாற்றிக் கொள்ள வேண்டும். நான் டைரக்டர் கதை சொல்லும்போது அதில் ஒன்றிப்போய் விடுகிறேன். பிறகு அதில் முழு உழைப்பையும் கொடுக்கிறேன்.

சினிமாவில் நாம் திட்டமிடுவது எதுவும் நடக்காது. படத்துக்கு படம் மார்க்கெட் நிலவரம் மாறுபடுகிறது. கீழே இருப்பவர் மேலே செல்வதும் உயரத்தில் இருப்பவர் கீழே விழுவதும் சகஜமாக நடக்கிறது. எனவே எது கிடைக்கிறதோ அதை வைத்து வாழ்க்கையை நகர்த்த பழகிக் கொள்ள வேண்டும். சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போனாலும் கவலைப்படக்கூடாது.

எனக்கு அதிர்ஷ்டவசமாக நல்ல கதாபாத்திரங்கள் அமைகின்றன. சிறந்த நடிகை என்று பெயரும் வாங்கி விட்டேன். நிறைய டைரக்டர்கள், அவர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு தந்து கொண்டு இருக்கிறார்கள். இயக்குனர்கள் சொல்லி தருவதை விட இன்னும் திறமையாக நடிக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு இருப்பதால் அவர்களுக்கு பிடித்துப்போய் தொடர்ந்து வாய்ப்புகள் தருகிறார்கள்.

மற்ற நடிகைகளை பார்த்து நான் பொறாமைப்படுவது இல்லை. அந்த நடிகையின் கதாபாத்திரம் எனக்கு கிடைக்காமல் போய்விட்டதே என்று கவலைப்படுவதும் இல்லை. எனக்கு வரும் வாய்ப்புகள் வந்தே தீரும் அதை யாரும் பறித்து விட முடியாது. கஷ்டப்பட்டு நடித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.”

இவ்வாறு தமன்னா கூறினார்