பாலியல் வீடியோக்கள் ; வட்ஸ்அப் நிறுவனத்துக்கு உயர் நிதிமன்றம் நோட்டீஸ்

ஹைதராபாத்தை சேர்ந்த ‘பிரஜ்வாலா’ என்ற தொண்டு நிறுவனம், விரலியில் (pendrive) பதிவு செய்யப்பட்ட 2 பாலியல் துன்புறுத்தல் வீடியோக்களுடன் உயர்நிதிமன்றத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியது.

அதில், அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாகவும், இத்தகைய வீடியோக்கள் வெளியாவதை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

குறித்த கடிதத்தை கொண்டு ஒரு வழக்காக எடுத்துக் கொண்ட உயர்நிதிமன்றம், குற்றவாளிகளை கண்டறிய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.

மேலும், பாலியல் குற்ற வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை தடுப்பதற்கு தொழில்நுட்பரீதியாக தீர்வு காண்பதற்காக, மத்திய அரசு மற்றும் இணைய நிறுவன பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்தது.

இந்நிலையில், நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரான ‘பிரஜ்வாலா’ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபர்ணா பட், இவ்வழக்கில் ‘வட்ஸ்அப்’ நிறுவனத்தையும் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதை ஏற்று, வட்ஸ்அப்பை பிரதிவாதியாக சேர்த்துக் கொண்ட நீதிபதிகள், வட்ஸ்அப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், தாங்கள் அமைத்த குழுவுக்கு அமெரிக்காவில் இருந்து காணொளி காட்சி மூலமாக கூட ‘வட்ஸ்அப்’ நிறுவனம் யோசனை தெரிவிக்கலாம் என்றும் கூறினர்.