இன்று பலரின் விருப்பமான, நம்பகமான முதலீடாக மியூச்சுவல் பண்ட் உள்ளது.
நம் தேவைக்கு ஏற்ப மியூச்சுவல் பண்டுகளை தேர்வு செய்துகொள்ளலாம் என்பது இதில் உள்ள வசதி. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
மியூச்சுவல் பண்ட், அரசின் கண்காணிப்பின் கீழ் நடக்கும் திட்டம் என்பதால் நம்பகமானது. இதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேற முடியும். இந்த மாதிரியான விஷயங்கள்தான் பலரையும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் ஆர்வம்கொள்ள வைத்திருக்கிறது.
பொதுவாக, மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு, மியூச்சுவல் பண்ட் புரோக்கிங் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும், அங்கு அதற்கான படிவத்தை நிரப்பி, காசோலையை வழங்க வேண்டும்.
ஓடிக்கொண்டே இருக்கும் பலர் இதற்கெல்லாம் தங்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். அதனாலேயே தங்களின் மியூச்சுவல் பண்ட் முதலீட்டு எண்ணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால், ஆன்லைன் மூலமாகவே மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
ஒருவரின் கையில் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்போது உடனடியாக முதலீடு செய்வதற்கு வசதியாகத்தான் ஆன்லைன் மியூச்சுவல் பண்ட் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதில் முதலீடு செய்வது மிகவும் எளிது. மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் இணைய தளத்தில் நேரடியாக முதலீடு செய்ய முடியும். அதாவது, நாம் முதலீடு செய்ய விரும்பும் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் இணைய தளத்தில் நேரடியாக மியூச்சுவல் பண்ட் யூனிட்களை வாங்கலாம்.
இப்படி வாங்கும் மியூச்சுவல் பண்ட் யூனிட்டுகளை விற்பனை செய்யவோ, ஒரு திட்டத்திலிருந்து இன்னொரு திட்டத்துக்கு மாறவோ முடியும். எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்வது, மியூச்சுவல் பண்ட் முதலீடு குறித்த ஸ்டேட்மென்ட்டை பார்ப்பது என அனைத்து வேலைகளையும் ஆன்லைனிலே செய்ய முடியும்.
இதற்கு தனியாக ஆன்லைனில் ஒரு யூஸர் ஐடி, பாஸ்வேர்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மியூச்சுவல் பண்ட் நிறுவனத்துக்கும் தனியாக யூஸர் ஐடி உருவாக்க வேண்டியிருக்கும். நாம் ஏற்கனவே கே.ஒய்.சி. செய்யவில்லை எனில், அதை ஆன்லைனில் செய்வது அவசியம். யூஸர் ஐடி உருவாக்கும்போதே வங்கிக் கணக்கு குறித்த விவரத்தை அளிக்க வேண்டும். மேலும் அதனுடன், பான் கார்டு விவரம், வாரிசு விவரம் ஆகியவற்றைத் தரவேண்டியிருக்கும். இந்த தகவல்களைப் பூர்த்தி செய்தபிறகு ஆன் லைனில் முதலீடு செய்யலாம்.
ஏற்கனவே பான் கார்டு இருந்து, கே.ஒய்.சி. செய்திருந்தால், ரத்து செய்யப்பட்ட காசோலை கொடுக்க வேண்டும். அதாவது, ரத்து செய்த காசோலையை ஸ்கேன் செய்து அதை பண்ட் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும். இந்த வேலைகளைச் செய்தபிறகு எப்போது வேண்டுமானாலும் ஆன்லைனில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய முடியும். ஆன்லைனில் முதலீடு செய்யும்போது நேரடித் திட்டம் அல்லது ரெகுலர் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். என்.ஏ.வி.யில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது.
மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர் மூலமாகவும் ஆன்லைனில் முதலீடு செய்ய முடியும். சாதாரணமாக, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் ஆன்லைன் மூலமாக முதலீடு செய்யும்போது அந்தந்த நிறுவனத்தின் பண்டுகளில் மட்டும்தான் முதலீடு செய்ய முடியும். விநியோகஸ்தர் மூலமாக முதலீடு செய்யும்போது இந்தச் சிக்கல் இருக்காது. அங்கு அனைத்து பண்டுகளிலும் ஒரே இடத்தில் முதலீடு செய்யலாம்.
குறிப்பிட்ட நிறுவனங்களின் இணையதளம் மூலமாக ஆன்லைனில் முதலீடு செய்யும்போது, அந்த நிறுவனங்களில் கணக்குத் துவங்குவதற்கு காகித வடிவத்தில் முதலீட்டாளரின் ஆவணங்கள் தரவேண்டியிருக்கும். இதை ஒருமுறை மட்டும் செய்தால் போதும். அதேபோல, இ.சி.எஸ். கொடுக்க ரத்து செய்யப்பட்ட காசோலை தர வேண்டியிருக்கும்.
மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் ஆன்லைன் மூலமாக முதலீடு செய்வதற்குமுன் நாம் தேர்ந்தெடுக்கும் பண்ட் சரியானதா என்பதை நன்றாகப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சரியாகத் தெரியாமல் அல்லது தேவை இல்லாத பண்டை வாங்கினால் அந்த பண்ட் யூனிட்டை விற்றுத்தான் பணத்தை வெளியே எடுக்க முடியும். எனவே, முதலீட்டில் கவனம் தேவை.