ராமேசுவரம் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திரத் திருவிழா நடந்தது.

விழாவையொட்டி கோவிலில் உள்ள விசுவநாதர் சன்னதி முன்பு 1008 சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு அதன் மையப்பகுதியில் தங்கமுலாம் பூசப்பட்ட குடம், அபூர்வ திரிசங்கு ஆகியவை வைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து அனைத்து சங்கு மற்றும் தங்கமுலாம் பூசப்பட்ட குடத்திலும் புனித நீர் ஊற்றப்பட்டு குருக்கள் விஜயகுமார் போகில், சர்வசாதகம் சிவமணி ஆகியோர் தலைமையில் சிறப்பு மந்திரங்கள் ஓதப்பட்டது.

அதன்பின்பு தங்கமுலாம் பூசப்பட்ட குடம் மற்றும் 1008 சங்குகளிலும் இருந்த புனித நீரால் கருவறையில் உள்ள ராமநாதசாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் கோவில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், பேஷ்கார்கள் அண்ணாத்துரை, கலைச்செல்வன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.