தனது வாழ்க்கையில் சிறந்த வெற்றிகளில் இதுவும் ஒன்று: பி.வி.சிந்து

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனை பி.வி.சிந்துவும் (இந்தியா), தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரினும் (ஸ்பெயின்) கோதாவில் குதித்தனர்.

47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பி.வி.சிந்து 21-19, 21-16 என்ற நேர் செட்டில் கரோலினா மரினை சாய்த்து முதல்முறையாக இந்திய ஓபன் கோப்பையை உச்சிமுகர்ந்தார்.

கரோலினா மரினை சாய்த்து ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்ட இந்திய மங்கை பி.வி.சிந்து பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், தனது வாழ்க்கையில் சிறந்த வெற்றிகளில் இதுவும் ஒன்று என்று குறிப்பிட்டார்.

சிந்து மேலும் கூறுகையில், ‘எனது செயல்பாடு உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை பொறுத்தவரை முதல் கேம் தான் முக்கியம். அதை வெற்றியுடன் தொடங்கியதே திருப்புமுனை. பேட்மிண்டனில் ஒவ்வொரு புள்ளியும் முக்கியமானது. அதை எடுக்க இருவரும் கடுமையாக போராடினோம். எந்த புள்ளியும் எளிதாக வந்து விடவில்லை. இந்த ஆண்டில் எனது 2-வது பட்டம் இதுவாகும். ஏற்கனவே சீன ஓபனை வென்று இருந்தேன். என்னை உற்சாகப்படுத்திய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்’ என்றார்.