பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணிக்க வேண்டாம்! ஐ.நா.பிரதிநிதி மக்கோலி

பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணித்து அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியும் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான உனா மக்கோலி கோரிக்கை விடுத்தார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பேண்தகு இலங்கை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கான கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

பொதுவான மனிதாபிமான செயற்பாடுகளின் அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளது.

2030ம் ஆண்டு நிலையான அபிவிருத்தி திட்டத்துக்கான பல தெளிவான பாதைகளை இலங்கை வரையறுத்துள்ளது.

குறிப்பாக வறுமை ஒழிப்பு பொருளாதார வளர்ச்சி வேகம், சுகாதாரம் போன்றவற்றில் இலங்கை பல முன்னேற்றகரமான பாதைகளை வெளிக்காட்டி வருகின்றது.

மக்களுடன் மக்களுக்காக மக்களால் செய்யப்படுகின்ற அபிவிருத்தியே நிலைத்து நிற்கும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

இலங்கையும் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து அபிவிருத்தியை அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக முன்னெடுக்க வேண்டும்.

அவ்வாறின்றேல் குறிப்பிட்ட சில மக்கள் அசாதாரண சூழ்நிலைக்கு உள்ளாகி விடுவர்.பாதிக்கப்பட்ட மக்களினதும் அடிப்படை வசதிகளற்ற மக்களினிதும் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

17 நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய தேவையான செயற்பாட்டு ரீதியான இலக்குகளை இலங்கை வரையறுக்க வேண்டும்.

குறிப்பாக உலக சந்தையில் இலங்கைக்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன. அதனை தக்க வைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை இனிவரும் காலங்களில் சிந்திக்க வேண்டும்.

இதற்கு ஐக்கிய நாடுகள் சபை தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.

அத்தோடு நிலையான அபிவிருத்தியின் பொதுவான கடப்பாடுகள் மற்றும் பொறுப்புணர்வு தொடர்பில் நாம் அதிகம் சிந்திக்க வேண்டும்.

இலங்கையிலும் ஒரு தாய் மக்களாக சகோதரத்துவத்துடன் வாழ வேண்டிய காலம் இதுவாகும். ஆகவே நாம் மக்களின் நன்மைக்காகவே செயற்பட வேண்டும்.

அந்த பொதுவான இலக்குகளை அடைய தேவையான செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.

அனைத்து மக்களும் அனைத்து இன மதம் சாராத மக்களும் அபிவிருத்தியில் ஒன்றிணைணய வேண்டும்.

அபிவிருத்தி இலக்கு என்பது மிகவும் கடினமானது என்பதை நாம் அனைவருமே உணர்ந்துள்ளோம். ஆனால் அந்த இலக்கை அடைய தேவையான அனைத்து சாத்தியக்கூறுகளும் இலங்கையிடம் உள்ளன.

தெற்காசியாவிலேயே இலங்கையின் அபிவிருத்தி மார்க்கங்கள் வித்தியாசமானவை. அது மிகவும் வரவேற்கத்தக்கது.

அந்த பயணத்தை அடைய கூட்டு ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகின்றது. வரலாற்றில் இது தீர்க்கமான காலமாக உள்ளது.

ஜனாதிபதியின் உரையில் காலநிலை மாற்றம் தொடர்பில் அதிகமாக கதைத்திருந்தார்.

உண்மைதான் காலநிலை மாற்றமே நமக்குள்ள பெரிய சவாலாக உள்ளது.

அந்த சவாலை அடைய நாம் ஒன்றிணைவோம் என்றார்.