வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது பதவியிலிருந்து விலகவேண்டும் என வடமாகாண பட்டதாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு இன்று வியாழக்கிழமை வருகை தந்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தம்மை வந்து பார்க்கவில்லை என்றும், தமது பிரச்சினைகள் குறித்து கேட்கவில்லை என்றும் ஆத்திரமடைந்த பட்டதாரிகள் முதலமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில்,
“பட்டதாரிகளாகிய நாம் கடந்த 25 நாட்களாக யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றிய வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் எம்மை சந்திப்பார்கள் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம்.
ஆனால் அவர்கள் எம்மை வந்து சந்திக்காது சென்றுவிட்டார்கள். உண்மையில் எமது இரத்தம் கொதித்துக்கொண்டிருக்கின்றது.
நாம் தெரிவு செய்த எமது முதலமைச்சரே எம்மை கண்டுகொள்ளாமல், எமது பிரச்சினைகளை கவனிக்கவில்லை எனின் எம்மை கவனிப்பதற்கு வடமாகாணத்தில் யார் இருக்கின்றார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது சொந்தப்பிரஜைகள் வீதியில் இருக்கின்றார்கள் என எண்ணி ஒரு வார்த்தை சரி கதைக்க வேண்டிய ஒருவர் எம்மைத் திரும்பிப் பார்க்காது செல்வது கவலைக்குரிய விடயம்.
தனது சொந்தப்பிரஜைகளின் பிரச்சினைகளைக் கேட்பதற்கு நேரம் இல்லை என்று சொன்னால், முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
எமது பிரச்சினைகளை கேட்க முடியாவிடின், அரசியல்வாதிகள் அனைவரும் ஏன் இந்த பதவியில் இருக்கின்றீர்கள்.
தேர்தல் காலங்களில் எம்மைத் தேடி வந்து எம்மிடம் வாக்கு கேட்கின்றார்கள். வடமாகாணத்தின் புத்திஜீவிகள் நாங்கள் இன்று வீதியில் இருக்கின்றோம். அந்நியர்கள் என எம்மை நினைத்து திரும்பிப்பார்க்காமல் செல்கின்றார்கள்.
எமது பிரச்சினைகளைக் கேட்க முடியாவிடின் ஏன் அந்தந்தப் பதவிகளில் இருக்கின்றீர்கள். தமது பதவிகளில் இருந்து விலகிச் செல்லுங்கள்” என்று வலியுறுத்தியுள்ளனர்.







