சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, மதிமுக செயலாளர் வைகோ தலைமையில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழுவினர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். இன்று காலை 10.45 மணியளவில் நடந்த போராட்டத்தில், இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைக்கு சர்வதேச அளவில் விசாரணை கமிஷன் அமைக்கவும் மற்றும் அங்கு நடந்த போர்க்குற்றங்களை சர்வதேச நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கையும் சேர்ந்து தீர்மானம் கொண்டுவந்து 18 மாதம் ஆகிறது. இதுவரை எந்த முயற்சியும் எடுக்காத இலங்கை இன்னும் 18 மாதம் கால அவகாசத்தை கேட்கிறது. இது தமிழினப் படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கும் நீதி கிடைக்கிற வாய்ப்பை நீர்த்துப்போகச்செய்ய இலங்கை செய்யும் சூழ்ச்சி. இழுத்தடித்து இழுத்தடித்து நீதியை நிராகரித்துவிட வேண்டும் என்பதுதான் இலங்கையின் திட்டமாக உள்ளது.
எனவே, இலங்கையின் இந்த அயோக்கியத்தனத்தை கண்டித்து கடந்த 11ம் தேதி கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது என அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், இன்று இலங்கை அரசை கண்டிக்கும் வகையில் நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழுவினர் போராட்டம் நடத்தினர். இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், வணிகர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் வெள்ளையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
இலங்கை முன்னாள் அதிபரும், இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்கு காரணமானவருமான ராஜபக்சேவை கண்டித்தும், சர்வதேச நீதிபதிகளின் விசாரணை தேவை எனவும், ஐநா மனித உரிமை ஆணையத்துக்கு கோரிக்கை விடுப்பது உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தி வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய வைகோ, இலங்கையில் நடந்த படுகொலைக்கு சர்வதேச நீதிபதிகள் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்திட வேண்டும், ஒன்றரை லட்சம் தமிழர்களின் படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவுக்கு தண்டனையை பெற்றுத் தரவேண்டும். நம் தமிழ் மக்களை காக்க, ஜல்லிக்கட்டுக்கு போராடிய மாணவர்களும், இளைஞர்களும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு தீப்பொறிபோல் தெறித்தெழ வேண்டும் என வைகோ ஆவேசத்துடன் பேசினார்.
இதனைத்தொடர்ந்து, வைகோ தலைமையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர். பின்னர், போலீசார் தடுத்து நிறுத்தி வைகோ மற்றும் வெள்ளையனை கைது செய்தனர். இவர்களுடன் சுமார் 250க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
முதலில், வெள்ளையன் உள்ளிட்ட 250 பேர் கைது செய்யப்பட்டு 3 வேன்களில் ஏற்றிச்செல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக போலீசாரின் அடுத்த வேன் வருவதற்கு காலதாமதமானதால் வைகோ வெயிலியே காத்துகிடந்தார். பின்னர், அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.