முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது சொந்த ஊருக்கு தனது மனைவியுடன் பயணித்து விட்டு வந்துள்ளார். அந்த பயணம் அவருக்கு மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மக்கள் அவருக்கு கொடுத்த வரவேற்பு அவரே எதிர்பாராதது என்று அவரே கூறியுள்ளார்.
ஒரே ஒரு இடத்தில் மட்டும் யாரோ மர்ம நபர்கள் கார் மீது கல்லெறிந்துள்ளனர். அதை கேள்விப்பட்டதும் தொண்டர்கள் கொதித்து எழுந்தனர். ஆனால் பன்னீர் அதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அமைதிப்படுத்திவிட்டார்.
ஆனாலும் தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி.பாஸ்கரன் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கினார். பன்னீருக்கு கிடைத்த வரவேற்பில் அவருக்கு எதிராக வசை பாடியவர்கள் கூட அதிர்ச்சியடைந்து இருப்பதாக கூறுகிறார்கள். போடி தொகுதிக்குள் இனிமேல் பன்னீர் நுழைய முடியாது என்று கூறிய போடி நகர செயலாளர் பாலமுருகன் அந்த பக்கமே வரவில்லை என்கிறார்கள்.
செல்லும் இடங்களிலெல்லாம் கும்ப மரியாதையுடன் வரவேற்பு என்று அவர் திக்குமுக்காடி போனார். உங்களின் இந்த அன்புக்கு நான் என்ன செய்ய போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஏதாவது செய்வேன் என்று உருகினாராம். ஆனால் மக்களோ, நாங்கள் காசு கொடுத்து கூடிய கூட்டமல்ல.
உங்கள் அன்பிற்காக வந்தோம் என்று மேலும் உருக வைத்தார்களாம். மொத்தத்தில் பன்னீருக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவை பார்த்த சசி டீம் படு அப்செட்டாம்.







