இரட்டை இலை சின்னம் விவகாரம்.. 22ஆம் தேதி ஆஜராக சசிகலா, ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!!

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது தொடர்பான விவகாரத்தில் வரும் 22ஆம் தேதி சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் நேரில் ஆஜராக வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அன்றிரவே சின்னம் யாருக்கு என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் தரப்பு அதிமுகவும் சசிகலா தரப்பு அதிமுகவும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் இரு தரப்பிடமும் மாறி மாறி விளக்கம் பெற்று வருகிறது.

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக சசிகலா தரப்பினரும் ஓபிஎஸ் தரப்பினரும் நேரில் முன்னிலையாக வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காலை 10.30 மணிக்கு இரு தரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரைவிட்டுள்ள தேர்தல் ஆணையம் அன்றிரவே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது குறித்து முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.