உயிருள்ளவரை சசிகலா அணியில்தான் இருப்பேன்.. சொல்கிறார் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி!!

உயிர் உள்ளவரை சசிகலா தலைமையிலான அணியில்தான் இருப்பேன் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அதனையடுத்து, தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். பிப்ரவரி 5ஆம் தேதி தனது முதல்வர் பதவியை அவர் திடீரென ராஜினாமா செய்தார்.

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் கட்சி பதவி பறிக்கப்பட்டது. முதல்வராக பொறுப்பேற்க சசிகலா தீவிரமாக முயற்சி செய்தார்.இதனையடுத்து பிப்ரவரி 7ஆம் தேதி திடீரென ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. அன்று முதல் சசிகலாவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அவ்வவ்போது வெளியிட்டு வருகிறார் ஓபிஎஸ். இதனால் கட்சி இரண்டாக பிளவு பட்டது.

இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். டிடிவி தினகரன் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 11 எம்.எல்.ஏக்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும் சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றார்.

இதனைத் தொடர்ந்து சசிகலா அணியில் உள்ள 5 அமைச்சர்கள், சில எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க ஓ.பி.எஸ். அணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஓபிஎஸ் அணிக்கு ஆதரவளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து விளக்கமளித்துள்ள செந்தில் பாலாஜி, உயிர் உள்ளவரை சசிகலா தலைமைக்கே ஆதரவளிப்பேன் என்று தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அணிக்கு தாம் ஆதரவளிக்க இருப்பதாக தேவையில்லாமல் வதந்தி பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஜெயலலிதா தலைமையிலான அரசில் அமைச்சராகப் பதவி வகித்த செந்தில் பாலாஜி, தற்போது அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.