போர்ச்சுக்கல் நாட்டின் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டா. ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் அவர், இந்த தலைமுறையில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். கடந்து ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் இவர் தலைமையிலான போர்ச்சுக்கல் அணி கோப்பையை வென்றது.
போர்ச்சுக்கல் நாட்டின் தனி அதிகாரம் படைத்த தீவு மெடீரா. இந்த தீவின் தலைநகரான புன்சாலில்தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ பிறந்தார். எனவே, கிறிஸ்டியானோ ரொனால்டோவை சிறப்பிக்கும் வகையில் புன்சால் விமான நிலையத்திற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயர் வைக்கப்படும் என்று அத்தீவின் அதிபர் மிகுயல் அல்புகுயர்கியூ அறிவித்தார்.
அதன்படி மார்ச் 29-ந்தேதி புன்சாலில் சுவீடன் அணிக்கெதிராக போர்ச்சுக்கல் அணி நட்பு ரீதியாக போட்டியில் விளையாடுகிறது. அதன்பின் ரொனால்டோ பெயர் வைக்கப்பட இருக்கிறது.
இதற்கு மெடீராவில் உள்ள ஏராளமான பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போர்ச்சுக்கல் அரசுக்கு புகாரும் அளித்துள்ளனர். பெயர் மாற்றம் குறித்து தங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என் போர்ச்சுக்கல் அரசு நீதி விசாரணையை தொடங்கியுள்ளது.
ரொனால்டோ பெயர் மாற்றத்திற்கு எழுந்துள்ள விமர்சனத்திற்கு அதிபர் மிகுயல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெடீரா அதிபர் மேலும் கூறுகையில் ‘‘சிறந்த மெடீரா மனிதருக்கு கொடுக்கும் மரியாதை இது. சிறந்த விளையாட்டு வீரருக்கும், சிறந்த போர்ச்சுக்கல் மனிதருக்கும் கிடைக்கும் அங்கீகாரம்.
ரொனால்டோ குறித்து கேள்வி எழுப்புபவர்கள் நடைமுறை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் இந்த எதிர்ப்பு முட்டாள்தனமானது. விமான நிலையத்திற்கு நாங்கள் பணம் வழங்குகிறோம். தன்னாட்சி பிராந்தியமான மெடீராவின் சொத்துதான் விமான நிலையம்.
ரொனால்டோ பெயர் வைப்பதற்கு நான் யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்?’’ என்று சாடியுள்ளார்.