வீட்டில் பிணமாக பெற்றோர் : துக்கத்திலும் தேர்வு எழுத வந்த மாணவி!

தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தன் பெற்றோர் உயிரிழந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சேலம் மேட்டூர் பகுதியை சேர்ந்த அமிர்த கௌரி என்ற மாணவி தான் இவ்வாறு எழுச்சியூட்டும் செயலில் ஈடுபட்டார்.

அமிர்த கௌரியின் தந்தை முருகேசன், தாய் சுமதி இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இதில், முருகேசன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தாய் சுமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், இந்த தம்பதியினரின் மூன்றாவது மகளான அமிர்த கௌரி, பொறியாளராக வேண்டும் என்ற தன்னுடைய பெற்றோர்களின் கனவை நிறைவேற்ற, மிகுந்த துக்கத்திற்கு இடையேயும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார்.

பெற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் மனதில் துக்கத்தை தாங்கிக்கொண்டு தேர்வு எழுத வந்த இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.