தீபா பேரவையை விட்டு விலகினார் “மேடி”… நிர்வாகிகள் நியமன சர்ச்சை எதிரொலி!

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை நிர்வாகிகள் நியமனத்தில் ஏற்பட்ட சர்ச்சையினால் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் பேரவையில் இருந்து விலகியுள்ளார். தனக்கும் பேரவைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது சந்திக்க வந்தார் தீபா அவரை பார்க்க விடவில்லை என்று கூறி ஊடகங்களில் புகார் தெரிவித்தார். ஜெயலலிதா மரணத்தின் போது பிரச்சினைக்கு இடையே அஞ்சலி செலுத்தினார்.

சசிகலாவை பிடிக்காத தொண்டர்கள் தீபாவை நோக்கி திரும்பினர். இதனால் அரசியலுக்கு வரப்போவதாக கூறிய தீபா, எம்ஜிஆர் பிறந்தநாளில் தனது அரசியல் பயணத்தை அறிவித்தார்.

திசை மாறிய காற்று
ஓபிஎஸ் ராஜினாமாவிற்குப் பின்னர் அவரது திடீர் மனமாற்றம் தமிழக அரசியலின் போக்கை மாற்றியது. அவருக்கு ஆதரவாளர்கள் வட்டம் அதிகரித்தது. இதனையடுத்து தீபாவும் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார். இருவரும் இணைந்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பேரவை தொடங்கிய தீபா
ஓபிஎஸ் தலைமையை ஏற்காத தீபா, பிப்ரவரி 24ஆம் தேதியன்று ஜெயலலிதா பிறந்தநாளில் பேரவை தொடங்கினார். எம்ஜிஆர் ஜெயலலிதா தீபா பேரவை என்று பெயர் வைத்தார். நிர்வாகிகள் நியமித்தார் இதில்தான் சிக்கல் உருவானது. தன்னுடன் இருக்கும் ராஜா – சரண்யாவை முக்கிய பொறுப்பில் நியமிக்கவே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ரகசிய கூட்டம்
செய்தியாளர்கள் வெளிப்படையாக சந்தித்து வந்த தீபா வளசரவாக்கத்தில் நிர்வாகிகளுடன் ரகசிய கூட்டம் நடத்தினார். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களை நான்கு மண்டலங்களாக பிரித்து 32 பொருட்பாளர்களை நியமனம் செய்து உள்ளனராம்.

கணவருக்கு தெரியாது?

நிர்வாகிகள் நியமனத்தில் கணவர் மாதவனுடன் தீபா கலந்து பேசவில்லையாம். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உண்மை தொண்டர்களுக்கு பொறுப்பு அளிக்காமல் பணத்தை வாங்கிக்கொண்டு பொறுப்பு அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. நிர்வாகிகள் நியமனத்தில் தீபாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

கணவர் விலகல்
இது குறித்து கருத்து கூறியுள்ள தீபாவின் கணவர் மாதவன், கடந்த 3 மாதமாக நான் தீபா உடன் இருந்து தொண்டர்களின் விருப்பப்படி செயல்பட்டேன். இருவரும் இணைந்து நல்ல முடிவு எடுத்துவந்தோம். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது.

எனக்கு தெரியாது
ஓ.பன்னீர்செல்வத்தை தீபா சந்தித்தது, பேரவையை தொடங்கியது, பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது எதுவுமே எனக்கு தெரியாது. இவை அனைத்துமே தீபாவின் தனிப்பட்ட செயல்பாடுகள். பேரவை தொடங்கியபோது தீபாவுக்காகவே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

எந்த தொடர்பும் இல்லை
பொறுப்பாளர்கள் பட்டியலில் ஒருவரை கூட எனக்கு தெரியாது. தீபா தனித்து செயல்பட விரும்புகிறார். அவர் தனித்து செயல்பட்டாலும், சிறப்பாக செயல்படுகிறார். நான் இனி பேரவை சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன். எனக்கும், பேரவைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தீபா நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறியுள்ளார்.

யார் பிடியில் தீபா
இதனிடையே தீபாவை தினசரி சந்தித்து வரும் தொண்டர்களோ? தீபாவைச்சுற்றி இருக்கும் கும்பல் அவரை ஆட்டிவைப்பதாக கூறி வருகின்றனர். நாங்கள் தீபா பேரவையில் இருக்கிறோமா? இல்லையா என்ற நிலையில் தவிக்கிறோம். ஜெயலலிதாவைப் போல தீபாவும் ஒரு கும்பலின் பிடியில் சிக்கியுள்ளார் என்று புலம்புகின்றனர் ஜெயலலிதா விசுவாசிகள். என்னதான் நடக்கிறது தீபா விளக்குவாரா?