மைத்திரியின் யாழ். வருகையினை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!!

ஜனாதிபதியின் வருகையினை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் இராணுவத்தில் சரணடைந்தவர்களின் உறவுகள் யாழில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக காலை 10.00 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

ஜனாதிபதியின் வருகையினை தமிழ் மக்களுக்கு சாதகமான வருகையாக பார்க்கவில்லை. இலங்கை இராணுவத்தினை உற்சாகப்படுத்தும் நிகழ்வாக பார்க்கின்றோம்.

1000 ற்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்படவுள்ளது.

நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றபோது, இராணுவத்தினை உற்சாகப்படுத்தும் நிகழ்விற்கு ஜனாதிபதி வருகைதரவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை கூடியுள்ள இந்த நேரத்தில் சரணடைந்தோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து சரியான பொறுப்புக்கூறல்கள் இல்லை.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை இல்லை. வட கிழக்கு மாகாணத்தில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. எமக்கு நியாயம் கூறவில்லை. அந்தவகையில்,

யாழ்ப்பாணத்திற்கான வருகை தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் வருகையாக கருதவில்லை.

முன்னர் அரசியல்வாதிகள் முன்னெடுத்த போராட்டமாக இருந்தது. தற்போது சூழல்மாறி, மக்கள் போராட்டமாக முன்னெடுக்கின்றார்கள்.

ஐ.நா அமர்வு நடைபெறும் இந்த சந்தர்ப்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்காவிடின், அங்கு நாம் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளோம்.

மக்கள் அமைதியாக இருக்கின்றார்கள். அங்கு ஒரு பிரச்சினையும் இல்லை நல்லிணக்கமாக இருக்கின்றார்கள் என காட்டுவார்கள்.

எனவே, இந்த எதிர்ப்பு போராட்டம் மிகப்பெரியளவில் மக்கள் போராட்டமாக வெடிக்க வேண்டும். இது ஒரு நல்ல சந்தர்ப்பம் இந்த சந்தர்ப்பத்தில், தமது தேவைகளை வெளிப்படுத்த வேண்டும்.

இந்த போராட்டத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரமன்றி ஏனையோர்களும் தமது ஆதரவினை வழங்க வேண்டும். குறிப்பாக இப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகம் சார்ந்தவர்கள், பட்டதாரிகள்,

பொது அமைப்புக்கள் அனைவரையும் ஒத்துழைப்புத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் இராணுவத்தில் சரணடைந்தோரின் உறவுகளையும், இந்த போராட்டத்தில் பங்குபற்றுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.