புனே மோசமான ஆடுகளம் அல்ல: இந்திய வீரர் விஜய் கருத்து!

புனேயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தொடக்கத்தில் இருந்தே சுழற்பந்து வீச்சு எடுபட்ட இந்த ஆடுகளத்தில் இந்திய அணி மூன்று நாட்களுக்குள் பணிந்து விட்டது. அதுவும் பேட்டிங்கில் (105 ரன், 107 ரன்) இந்திய அணியின் ‘மெகா சொதப்பல்’ கடும் விமர்சனத்திற்குள்ளானது.

ஆடுகளத்தன்மை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அறிக்கை அனுப்பிய போட்டி நடுவர் கிறிஸ் பிராட், இது மோசமான ஆடுகளம் என்று அதில் புகார் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய தொடக்க ஆட்டக்காரர் முரளிவிஜய் நேற்று கருத்து தெரிவித்தார். பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-


இந்திய கேப்டன் விராட் கோலி, கருண் நாயர், அஸ்வின் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட மைதானத்திற்கு வந்த காட்சி.

புனே ஆடுகளம் மோசமானது அல்ல. முதல் பந்தில் இருந்தே சவால் அளிக்கக்கூடிய ஆடுகளமாக இருந்தது அவ்வளவு தான். ஒரு கிரிக்கெட் வீரராக எப்போதும் பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கக் கூடாது. சில சமயம் இது மாதிரியான ஆடுகளங்களில் விளையாட வேண்டியது அவசியம். இதுவும் நல்லதுக்கு தான். இப்படிப்பட்ட ஆடுகளங்களில் ஆடுவதன் மூலம் நமது மன உறுதியையும், பேட்டிங் நுணுக்கங்களையும் பரிசோதித்துக் கொள்ள முடியும்.

புனே டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை முதல் இன்னிங்சில் எங்களது பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை (260 ரன்) கட்டுப்படுத்தினர். ஆனால் முதல் இன்னிங்சில் மிகப்பெரிய முன்னிலையை விட்டுக்கொடுத்தபிறகு, அதில் இருந்து மீள்வது என்பது எப்போதும் கடினமான ஒன்றாகும். நாங்கள் எங்களது திறமைக்கு ஏற்ப ஆடவில்லை.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டது பின்னடைவை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தையும் நாங்கள் கச்சிதமாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. சில அப்பீல்கள் வீண் ஆனது. டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்வதற்கு முன்பு கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு வழங்கப்படும் 15 வினாடிகளை இன்னும் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பெங்களூரு ஆடுகளத்தன்மையை சக வீரருடன் இணைந்து பரிசோதிக்கிறார், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ கீபே.

முதலாவது டெஸ்டில் என்ன தவறு செய்தோம் என்பதை அணி கூட்டத்தில் நீண்ட நேரம் விரிவாக விவாதித்துள்ளோம். ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஆட்டங்கள் குறித்தும் அலசினோம். ஒரு சில பகுதிகளில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. அதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். முந்தைய தோல்வியை மறந்து விட்டு புத்துணர்ச்சியுடன் இந்த டெஸ்டை தொடங்குவதை எதிர்நோக்கி உள்ளோம். ஆஸ்திரேலியாவுக்கு நாங்கள் மீண்டும் நெருக்கடி கொடுக்க வேண்டும். ஒரு அணியாக இது எங்களுக்கு கடும் சவாலாக இருக்கும். சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன்.

இவ்வாறு விஜய் கூறினார்.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த ஆடுகளம் எப்படி இருக்கும் என்று விஜயிடம் கேட்ட போது, ‘நல்ல ஆடுகளமாக இருக்கும் என்று கருதுகிறேன். மற்றபடி திறந்த மனதுடன் களம் இறங்கி, பிட்ச்சின் தன்மைக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்வேன்’ என்றார்.

இரு அணி வீரர்களும் பெங்களூருவில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.