ஓ.பி.எஸ் சென்னையில வீடு தேடுறாராம். யார்னு தெரிஞ்சா ஆளுங்கட்சிக்குப் பயந்து யாரும் வீடுதரமாட்டாங்கனு நம்ம ஹீரோக்களோட லேட்டஸ்ட் கெட்டப்புகளுக்கு மாறி வீடு தேடுறார் ஓ.பி.எஸ்.
ஏரியா முழுக்க சுத்தி டூ லெட் போர்டை கழுத்துல தொங்கப்போட்ட ஒரே ஒரு வீடு மட்டும் கண்ணுல தென்பட, பக்கத்துவீட்டிலேயே ஹவுஸ் ஓனர். இந்தவீட்டை விட்டா வேற வழியேயில்லைனு யோசிச்சு ஏற்கெனவே இருந்த வெள்ளைத்தாடி செமத்தியாக மேட்ச் ஆக கண்ணாடியை மட்டும் வாங்கி மாட்டி கபாலி ரஜினியாகவே மாறி களத்துல குதிக்கிறார் ஓபிஎஸ். ‘வந்துட்டேன்னு சொல்லு’னு வாட்ச்மேன்கிட்ட சொல்ல, அவர் சொல்லி வெளியே வந்து பார்க்கிறார் வீட்டு ஓனர். ஓனருக்கு முன்னாலேயே எகத்தாளமாக சேரில் உட்கார்ந்திருக்க காண்டாகிறார் ஓனர். உனக்கு காண்டாகுதுனா நான் உட்காருவேன்டா அதுவும் கால்மேல கால் போட்டு உட்காருவேன்டா ஸ்டைலா கெத்தா.. என நீட்டி முழக்கி பன்ச் அடிக்க .. உட்காரலாம் அப்படி ஓரமா போயி உட்காருங்க எதுவும் சொல்லமாட்டேன். ஆனா இங்க உட்காராதீங்க இது என்வீடு என கதவை அடைத்துவிட்டு நடையைச் சாத்துகிறார்.
கபாலிதான் கைகொடுக்கல பைரவா கெட்டப்பாச்சும் கொடுக்குதான்னு பார்ப்போம்னு டீகடையில் நின்றுகொண்டிருந்த சைக்கிளை சைக்கிள் கேப்பில் எடுத்துக்கொண்டு பீ.ஜி.எம் மட்டுமே இல்லாத குறையாய் வீட்டின் முன் என்ட்ரி ஆகிறார் ஓபிஎஸ். வீடுலாம் தர்றேன் யாரு எந்த ஊருங்கிற டீட்டெயில்ஸ்லாம் மொதல்ல குடுங்கன்னு ஓனர் சொன்னதும், ‘யார்ரா யார்ரா இவன் ஊரைக்கேட்டா தெரியும்’ னு பாட்டாகவே பாடி கெத்துக்காட்ட.. உங்களுக்கு வீடு கொடுக்குறதுக்காக ஊருக்குள்ளலாம் நான் போயி விசாரிக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை தம்பி, கைமேல காசோட பலபேரு வீடு கிடைக்காம அலைஞ்சிட்டிருக்கானுங்க. போயி வேற ஏரியாவாப் பாருங்கனு சொல்ல கடுப்பான ஓ.பி.எஸ் ‘இன்னைக்கி நிறைய பேருகிட்ட இல்லாத கெட்டபழக்கம் ஒண்ணு என்கிட்ட இருக்குது..’னு சொல்ல, அதுவேற இருக்குதா சத்தியமா உங்களுக்கு வீடே இல்லையின்னு சொல்லிட்டு போகிறார் ஓனர்! .
சொன்ன சொல்லைக் காப்பாத்தியாகணுமேனு தளபதியாக இருந்தவர் ‘தல’யாக மாறி நாலு லிட்டர் நல்லெண்ணெயை நடுநெஞ்சில் தடவிக்கொண்டு ‘விவேகம்’ அஜித்தாக நடந்தே வீட்டுக்குப் போகிறார். நீங்க தி.மு.கக்காரரா என வீட்டுக்காரர் கேட்க இது என்னடா அ.தி.மு.கவுக்கு வந்த சோதனைனு ஜெர்க் ஆகிறார் ஓ.பி.எஸ். இல்ல.. சட்டைகிட்டையெல்லாம் கழட்டிட்டு இப்படி ரோட்டுல வாக்கிங்காவே வந்திருக்கீங்களே என கேட்டதும்தான் அப்பாடா தப்பிச்சேன் என மூச்சேவருகிறது ஓ.பி.எஸ்ஸுக்கு. நடையில வேகம் இருந்தா மட்டும் பத்தாது செயல்லயும் விவேகம் இருக்கணும். இவ்வளவு பேர் இருக்குற அப்பார்ட்மெண்டுல இப்படியா சட்டை போடாம வாரது வீடெல்லாம் தரமாட்டேன்னு சொல்லி கதவை உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு போய்விடுகிறார் வீட்டு ஓனர். ‘நான் இறங்கிப்போறவன் இல்ல ஏறிப்போறவன் தெரியும்ல’னு எவ்வளவோ சொல்லியும் தயவு செஞ்சு இப்ப இறங்கிப்போங்கனு அவரை வெளியேற்றுகிறார் வாட்ச்மேன்.
எந்த கெட்டப்புக்குமே லோகத்துல மரியாதை இல்லாம போச்சேனு வெந்து நொந்துபோயி நாலுநாள் வரப்பட்டினியாகக்கிடந்ததில் புரொடியூசர் பாலாஜி மாதிரி இருந்த ஓ.பி.எஸ் ஆர்.ஜே.பாலாஜி போல மாறிவிடுகிறார். தாடி பாலாஜியாக மாறுறதுக்குள்ள கடைசி ஆயுதமான இந்த ஆர்.ஜே.பாலாஜி கெட்டப்புலயாவது எப்படியாச்சும் வீட்டை புடிச்சிடணும்ங்கிற பிளானிங்கோட போய் வீட்டுக்கதவை தட்டிய ஓ.பி.எஸ், ஹாய்.. ஹாய்.. ஹாய்… ரெண்டுக்கு வீடு இருக்குனு சொன்னான் என் ஃப்ரெண்டு. இந்தவீடுதானா ஏரியாவோட எண்டு..னு பேச ஆரம்பித்ததும், அய்யய்யோ நீங்களா.. நான் வீடு வாடகைக்கே கொடுக்கலை. சும்மா அஸ்ட்ராலஜிக்காக போர்டை அப்படி தொங்க விட்டிருக்கேன். ஆக்சுவலா நான் வீட்டை வித்தே நாலு மாசம் ஆகுதுன்னு தெறித்து உள்ளே ஓடுகிறார் வீட்டு ஓனர்! .







