ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று நடக்கிறது

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5-ந்தேதி முதல் மே 21-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 44 வெளிநாட்டினர் உள்பட 140 வீரர்கள் 8 அணிகளால் தக்க வைக்கப்பட்டனர். மற்றவர்கள் கழற்றி விடப்பட்டனர்.

அணிகளால் விடுவிக்கப்பட்டவர்கள், புதியவர்கள் என்று 130 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 357 வீரர்கள் இந்த முறை ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று தெரிவித்தது. இதில் 227 பேர் எந்த சர்வதேச போட்டியிலும் ஆடாதவர்கள் ஆவர்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஏலம் விடுவதில் பிரசித்தி பெற்ற லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் மேட்லி வீரர்களுக்கான ஏலத்தை நடத்துகிறார்.

இதில் யார் அதிக விலைக்கு போவார்கள் என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். இங்கிலாந்து 20 ஓவர் அணியின் கேப்டன் இயான் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், இலங்கை கேப்டன் மேத்யூஸ், ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், மிட்செல் ஜான்சன், இந்தியாவின் இஷாந்த் ஷர்மா ஆகியோரின் அடிப்படை விலை அதிகபட்சமாக ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது ரூ.2 கோடியில் இருந்து இவர்களின் விலை தொடங்கும்.

அணி நிர்வாகங்கள் ஆல்-ரவுண்டர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களையே அதிகமாக குறி வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்தின் காலின் டி கிரான்ட்ஹோம், ஆப்கானிஸ்தானின் முகமது நபி, நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன், வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தின் டைமல் மில்ஸ், தென்ஆப்பிரிக்காவின் ரபடா ஆகியோர் நல்ல விலைக்கு போகலாம்.

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிகட்டத்தில் யார்க்கராக பந்து வீசி கலங்கடித்த தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன் (அடிப்படை விலை ரூ.10 லட்சம்) மற்றும் அபினவ் முகுந்த் (ரூ.30 லட்சம்) ஆகியோர் மீதும் கணிசமான எதிர்பார்ப்பு உள்ளது.

ஒவ்வொரு அணியும் தலா ரூ.66 கோடி வரை செலவு செய்ய முடியும். தக்க வைத்துள்ள வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போக மீதி தொகையை கொண்டு ஏலத்தில் செலவு செய்யலாம். இந்த வகையில் அதிகபட்சமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.23.35 கோடி இருப்பு வைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னணி நிர்வாகிகள் சி.கே.கண்ணா, அமிதாப் சவுத்ரி, அனிருத் சவுத்ரி ஆகியோர் ஏலத்தில் பங்கேற்க அனுமதி இல்லை என்று வினோத் ராய் தலைமையிலான இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி அறிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை சுட்டிக்காட்டி அவர்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.