தனியார் உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த விசேட சட்டம்!!

தனியார் உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் விசேட சட்டமொன்று விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தனியார் உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்கமைத்து கட்டுப்படுத்தும் சட்டமொன்று இந்த ஆண்டில் நாடாளுமன்றில் சமர்ப்பித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

இது தொடர்பிலான அடிப்படை வரைவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வரைவுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் தர நிர்ணயங்களை உருவாக்குவதே இந்த சட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பிலான தர நிர்ணயங்களை கட்டுப்படுத்துவதற்கு தனியான நிறுவனமொன்றை உருவாக்குவதா அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அந்த பொறுப்பினை ஒப்படைப்பதா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

நாட்டில் பல தனியார் நிறுவனங்கள் காணப்படுவதுடன் தனியார் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட மூன்று பல்கலைக்கழகங்களை நிறுவ அனுமதி கோரப்படுகின்றது.

வயம்ப, சப்ரகமுவ மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.