அமெரிக்க 45-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், பதவியேற்புக்கு முன்பே, தனது தலைமையிலான மந்திரிசபை மற்றும் நாட்டின் முக்கிய துறைகளுக்கான தலைமை அதிகாரிகளை முன்கூட்டியே நியமித்திருந்தார். இவர்களில், தேசிய பாதுகாப்ப ஆலோசகர் மைக்கேல் பிளினும் ஒருவர்.
அமெரிக்க பாதுக்காப்புத்துறை புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரான மைக்கேல் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். இவர், இதற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பாக டிரம்ப்புக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்ததுடன், அவரது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஆரம்பநிலை பேச்சாளராக இருந்து வந்துள்ளார்.
டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்பதற்கு முன்னரே, அமெரிக்கா, ரஷ்யா மீது விதித்திருக்கும் தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்க சட்டத்திற்கு எதிரான வகையில், ரஷ்ய தூதரோடு கலந்துரையாடியதாக பிளின் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், மைக்கேல் பிளின் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில், பதவியேற்புக்கு முன்னதாக ரஷ்ய தூதருடன் பேசியது பற்றி முழுமையான தகவல்களை அளிக்காதமைக்காக அதிபர் டிரம்ப், மற்றும் துணை அதிபர் மைக் பென்சிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
பிளின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தற்காலிக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஜோசப் கெய்த் கெல்லாக் நியமிக்கப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இவர் 1967-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். 1997ம் ஆண்டு முதல் 1998 வரை 82-வது விமானப் படைப்பிரிவின் தளபதியாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.