டிரம்ப்பின் வருகைக்கு 20 லட்சம் பேர் எதிர்ப்பு : கையெழுத்து இயக்கத்தை பிரிட்டன் பிரதமர் நிராகரித்தார்

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை ஏற்று கடந்த மாதம் 27-ம் தேதியன்று சந்தித்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே அரசு முறை பயணமாக பிரிட்டனுக்கு வருமாறு டிரம்ப்புக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த ஆண்டுக்குள் பிரிட்டனுக்கு டிரம்ப் வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் தங்கள் நாட்டுக்கு வர கூடாது என பிரிட்டனில் உள்ள மக்களில் ஒருபிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களது கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற 18 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் டிரம்ப்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கையொப்பமிட்டுள்ள நிலையில் இந்த இயக்கத்தின் கருத்தை பிரிட்டன் பிரதமர் தெரசா மே நிராகரித்துள்ளார்.

தேவைப்பட்டால், பாராளுமன்றத்தை கூட்டி இதுதொடர்பாக விவாதம் நடத்த தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மாதத்துக்குள் பிரிட்டன் பாராளுமன்றத்தில் இதிதொடர்பான விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.