ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு சென்றார். அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
சசிகலாவின் தலைமையை ஏற்காத அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவு அளித்தனர். அரசியலுக்கு வர அழைப்பு விடுத்தனர். அவரும் ஒவ்வொரு முறையும் விரைவில் அரசியல் பயணத்தை தொடங்குவேன் என்று கூறி வந்தார்.
பிப்ரவரி 5ஆம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர் செல்வம். பிப்ரவரி 7ஆம் தேதியன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று தியானம் செய்தார் ஒ.பன்னீர் செல்வம் இதனால் கட்சி இரண்டாக பிளவு பட்டது. தினசரியும் அவரது ஆதரவாளர்கள் சென்று தங்களின் ஆதரவை பதிவு செய்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்தார். அதற்கு தீபா நன்றி தெரிவித்தார். பிப்ரவரி 24ஆம் தேதியன்று தனது அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பேன் என்று கூறினார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அதே நேரத்தில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றார். அப்போது அவர் தனது ஆதரவை தெரிவித்தார். முதல்வருடன் இணைந்து ஒன்றாக அதிமுகவின் இரு கரங்களாக செயல்படுவோம் என்று தீபா கூறினார்.
இதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்திற்கு சென்றனர். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு சென்ற தீபாவிற்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.