பாகுபலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். தெலுங்கு உலகில் பிரபாஸ் பிரபலமாக இருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்களால் இவர் அறியப்பட காரணமாக இருந்த படம் ‘பாகுபலி’ என்றால் அது மிகையாகாது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ‘பாகுபலி’ படத்தை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகத்திலும் பிரபாஸ் நடித்து வருகிறார்.
‘பாகுபலி’ படம் வெளிவந்த பிறகு அதன் இரண்டாம் பாகம் எடுக்க கொஞ்சம் காலதாமதம் ஆனபோது, அதில் நடித்த பல நடிகர்கள் வேறு வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்கள். ஆனால், பிரபாஸ் மட்டும் எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் இரண்டாம் பாகத்திற்காக தயாராகிக் கொண்டு இருந்தார்.
தற்போது ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த சமயத்தில், பிரபாஸ் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாகுபலியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ரூ.150 கோடி மெகா பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறதாம்.
மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகவிருக்கிறது. சுஜீத் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே, கடந்த 2014-ஆம் ஆண்டு பிரபாஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்த ‘ரன் ராஜா ரன்’ என்ற படத்தை இயக்கியவர். இப்படத்தில் பிரபாஸ் போலீஸ் வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
யு.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. சங்கர் எசன் லாய் இசையமைக்கிறார்கள். ஒளிப்பதிவை மதி கவனிக்க, சாபு சிரில் ஆர்ட் பணியை மேற்கொள்கிறார். இப்படத்திற்கான பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில், பிரபாஸின் பெரியப்பாவும், தெலுங்கு உலகில் ‘ரேபெல் ஸ்டார்’ என்றழைக்கப்படும் கிருஷ்ணம் ராஜு கலந்துகொண்டு படத்தை தொடங்கி வைத்தார்.
பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ‘பாகுபலி-2’ வருகிற ஏப்ரல் 28-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.







