கேப்பாப்புலவு பொதுமக்கள் கவனஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள இடத்திற்கு இன்று(12) வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் அங்குள்ள பொதுமக்களின் தற்போதைய போராட்ட வாழ்வினை மிக உன்னிப்பாக அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் கலந்திருந்ததுடன் அந்த இடத்தில் உள்ள சிறுவர்கள், மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களின் நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார்.
இதேவேளை, விமானப்படையினரின் காவலரன் விமானப்படையினரின் வெளிப்போக்குவரத்து என்பனவற்றை அவர் கவனத்திற்கு எடுத்துள்ளார்.
பின்னர் தனது கையடக்கத் தொலைபேசியூடாக ஒருவருடன் அழைப்பினை ஏற்படுத்தி ஆங்கில மொழியில் உரையாடியுள்ளார் என கூறப்படுகின்றது.
அவரின் இந்த செயற்பாட்டை காவலரனில் இருந்த விமானப்படை வீரர்கள் கவனித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் ஊடகவியலார்களை சந்தித்து பேசியுள்ளார்.
விமானப்படை அதிகாரிகள் மற்றும் அரச தரப்பினருடன் இந்த மக்களின் போராட்டமும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் தொடர்பாகவும் உந்துதலை கொடுத்து தீர்மானம் ஒன்றை எடுக்கும்படி முக்கிய பிரமுகர் ஒருவரிடம் தொலைபேசியில் உரையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த இடத்தில் தான் பேசிய முக்கிய பிரமுகரின் பெயரை ஊடகங்களுக்கு குறிப்பிட அவர் மறுத்த நிலையில், நீங்கள் குறிப்பிடும் அந்த முக்கிய பிரமுகரால் இந்த மக்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்மானத்தை பெற்றுக்கொடுக்க முடியுமா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், நிச்சயம் அந்த பிரமுகரினால் முடியும் அவரால் முடியாது போகும் என்றால் நான் அவருடன் பேசியிருக்கமாட்டேனே. ஆனால் இந்த மக்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்மானத்தை அவரால் கூட ஏற்க முடியாத சூழல்.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரச தரப்பினரிடம் ஒரு உந்துதலை அவரால் கொடுக்க முடியும். அதன் பிரகாரம் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை வெயிட்டுள்ளார்.
மேலும், கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்திற்கு எவ்வாறான தீர்வினை அரசு வழங்கப்போகின்றது என்பதிலே தான் நல்லாட்சியினை நிரூபிக்க முடியும் என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.







