அதிமுகவை உடைக்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சதி செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பரபரப்பு புகார் கூறியுள்ளார். ஆளுநர் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சசிகலா இன்று பிற்பகல் கூவத்தூர் சென்று ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன், செங்கோட்டையன், தம்பிதுரை, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்களும் ஆலோசனையில் பங்கேற்றனர்.
ஒவ்வொரு எம்.எல்.ஏக்களையும் தனித் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திய சசிகலா, உங்களின் மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறுமாறு கேட்டுள்ளார். குறிப்பாக மக்களிடம் தனக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது.
இந்நிலையில் ஆலோசனை கூட்டத்தை முடித்துக் கொண்டு போயஸ் கார்டன் திரும்பிய சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மன உறுதியுடன் உள்ளனர்.
எம்.எல்.ஏ.,க்களுடான சந்திப்பு மனநிறைவாக இருந்தது. ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் கடத்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையாக கருதுகிறேன். இதுவரை பொறுமையாக இருந்தோம். நாளை வேறு விதமாக போராடும் என்றார். நாளை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.







