ஜனாதிபதி மீது முழு நம்பிக்கை இருக்கின்றது..! அரசியல் மீது நம்பிக்கை கிடையாது..! வடக்கு முதல்வர்

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களுக்கு எற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் பின்னணியில் முன்னாள் போராளிகளா, இராணுவத்தினால் ஏவப்பட்டுள்ள கைக்கூலிகளா..?

அல்லது வேறு யாராவது இருக்கின்றார்களா..? என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு அறியத்தர வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கிழக்கு மாகாணத்தில் எழுக தமிழ் பேரணி இடம்பெறுவதை தடுக்கு முகமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அந்த தடைகள் அனைத்தையும் தாண்டி மக்கள் வழங்கிய பேராதரவு எங்களுக்கு இன்னும் அதிக ஊக்கத்தை கொடுத்துள்ளது.

நாங்கள் உண்மையில் அரசியல் தீர்வு ஒ்னறை எதிர்ப்பார்த்திருக்கின்றோம். எமது நாட்டில் இருக்கின்ற அரசாங்கங்கள் எல்லாம் நெருக்கடியை கொடுத்தால் மட்டுமே எதையாவது வழங்க முன்வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ், முஸ்லிம், கிறிஸ்த்தவ மக்கள் ஒன்றிணைந்து எங்களது எண்ணப்பாடுகளை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துகின்றோமோ, அது அரசாங்கத்திற்கு நெருக்கடியாக அமையும் என்பது எங்களது எதிர்ப்பார்ப்பு.

மேலும் நாங்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் ஒவ்வொன்றின் பிரதிபளிப்பும் எங்கோ ஒரு இடத்தில் தெரிகின்றது. நாங்கள் இங்கு எவ்வளவு நெருக்கடியை கொடுக்கின்றோமே அது குறித்து சர்வதேச நடவடிக்கை எடுக்க கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மீது தமக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது. எனினும், அரசியல் மீது தனக்கு ஒரு போதும் நம்பிக்கை கிடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.