பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படாது என்று தெரிய வந்துள்ளது. இன்றைய உச்சநீதிமன்ற பணிப் பட்டியலில் சொத்துக் குவிப்பு வழக்கு இடம் பெறவில்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவசரி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூர் தனி நீதிமன்றம் அனைவருக்கும் தலா 4 வருட சிறைத் தண்டனையையும் ரூ. 100 கோடி அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்தது. இதனால் ஜெயலலிதா தனது முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.
இதை எதிர்த்து பின்னர் கர்நாடக உயர்நீமன்றத்தில் அனைவரும் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்து அதிர வைத்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து அன்பழகன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு 8 மாதங்களாகியும் தீர்ப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
ஆனால் இன்று வரை தீர்ப்பு வெளியாகவில்லை. இன்று தான் இந்த வாரத்தில் நீதிமன்றத்திற்கு கடைசி பணி நாள். ஆனால் இன்றைய பணிப் பட்டியலிலும் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு இடம் பெறவில்லை. இனி இதை விட்டால் வருகிற திங்கள்கிழமைதான் தீர்ப்பு அளிக்கப்பட முடியும். எனவே இந்த வாரம் சசிகலா தப்பி விட்டார்.
அனேகமாக திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு சசிகலாவின் தலைவிதியை தீர்மானிக்கும் என்பதால் சசிகலா தரப்பு பெரும் கலக்கத்தில் உள்ளது.







