“மலையக மக்களின் தனி வீட்டுத்திட்டம் எனது வாழ்ந்நாளில் நான் கண்ட நீண்ட நாள் கனவு, அந்தக்கனவு இன்று நனவாகியுள்ளது” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி கிராமமும் காணி உறுதி பத்திரமும் கையளிக்கும் நிகழ்வு, நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “பெருந்தோட்ட பகுதிகளுக்கு வருகைத் தந்த போதெல்லாம், பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் வீட்டுப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது.
லயன் அரைகளில் மூன்று நான்கு குடும்பங்கள் ஒன்றாக வாழும் பெருந்தோட்ட மக்களின் அவலத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்கில், நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை உருவாக்கினேன்.
அன்று நான் உருவாக்கிய அமைச்சு, இன்று சிறந்த முறையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இன்று, ஊட்டுவள்ளி கிராமம் அமைத்து காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டமையானது, எனது வாழ்நாளில் நான் கண்ட கனவு நனவாகிய நாள் ஆகும்” என்றார்.
மேலும், “நாட்டில் தற்போது மூவின மக்களும் சமமான உரிமையுடன் இலங்கையாராக வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உங்களின் ஒத்துழைப்பின் ஊடாக பெருந்தோட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்க முடியும்” எனவும் தெரிவித்தார்.