இலங்கைக்கு எதிரான 4-வது போட்டி: பிளிஸ்சிஸ் அதிரடியில் தென்னாப்பிரிக்கா வெற்றி

தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதிய 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் பகல்- இரவாக நேற்று நடந்தது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 367 ரன் குவித்தது. இலங்கை அணிக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 334 ரன் எடுத்து இருந்தது.

டு பிளிஸ்சிஸ் 141 பந்துகளில் 185 ரன்கள் குவித்தார். இதில் 16 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த 2-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். 4 ரன்னில் கிர்ஸ்டன் சாதனையை தவற விட்டார். கிர்ஸ்டன் 1996-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சுக்கு எதிராக 188 ரன் எடுத்ததே சாதனையாக இருக்கிறது. குயின்டன் டி காக் 178 ரன் எடுத்து (2016, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) 3-வது இடத்தல் உள்ளார்.

இந்த போட்டியில் கேப்டன் டி வில்லியர்ஸ் 64 ரன்னும், தொடக்க வீரர் குயின்டன் டி காக் 55 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இலங்கை அணி 48.1 ஓவர்களில் 327 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 40 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணி தொடக்க வீரர் தரங்கா சதம் பலனில்லாமல் போனது. அவர் 90 பந்தில் 119 ரன்னும் (11 பவுண்டரி, 7 சிக்சர்), டிக்வெலா, வீரக்கொடி தலா 58 ரன்னும் எடுத்தனர். பர்னல் 4 விக்கெட்டும், பிரிடோரியஸ், இம்ரான் தகீர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் தென்னாப்பிரிக்கா 5 போட்டி கொண்ட தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இலங்கை அணி 4-வது போட்டியிலும் தோல்வியை தழுவியது பரிதாபமே.

5-வது மற்றும் கடைசி ஆட்டம் 10-ந்தேதி நடக்கிறது.