இலங்கைக்கெதிரான ஜெனீவா பிரேரணை இனி வராது!

நல்லிணக்க செயற்பாடுகளுக்காக அரசாங்கம் நாட்டில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள அமர்வில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கன்சியூலர் அலுவலகம் கொழும்பு பாரன் ஜயதிலக்க மாவத்தையிலிருந்து செலிங்கோ கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு இடமாற்றப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு நேற்று இடம்பெற்றன. இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே வெளிவிவகார பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக மற்றொரு யுத்தக் குற்றச்சாட்டு பிரேரணையொன்று ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுவது குறித்து ஊடகவியாளர்களின் கேள்விக்கும் பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அங்கு பதிலளித்தார்.

இலங்கைக்குக்கு எதிராக சர்வதேச சமூகம் எந்த பிரேரணையையும் கொண்டுவர முயற்சிக்கவில்லை.

மார்ச் மாத அமர்வில் இலங்கைக்கு பாதகமான எந்த விடயமும் இடம்பெறாது. அதனை உறுதியாக கூற முடியும்’ என்று கூறியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜெனீவா மனித உரிமை அமர்வில் பங்கேற்று கடந்த காலத்தில் இலங்கையில் மேற்கொண்ட விடயங்கள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுவார்.

ஜெனீவாவின் கடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அதிகமானவற்றை இலங்கை நிறைவேற்றியுள்ளது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதயசுத்தியுடன் சமகால அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் முழு ஆதரவை வழங்கி வருகிறது.

இதனால் சர்வதேச மட்டத்தில் நற்பெயர் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக வேறு பிரேரணைகள் கொண்டுவரப்படுமா என்று நம்ப முடியாது என பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.