மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகையை சட்டவிரோதமாகப் பெற்று, அவரது சொத்துகளை சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கபளீகரம் செய்து விட்டார்களோ என்ற சந்தேகம் அழுத்தமாக உள்ளது என்று முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியன் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மர்ம மரணம், அவரது சமாதியின் ஈரம் காயும் முன்பே அவரது அனைத்துப் பொறுப்புகளுக்கும் சசிகலா வரத் துடிப்பது, ஜெயலலிதா மறைந்த பின்னும் வேதா நிலையத்தை சசிகலா அண்ட் கோ ஆக்கிரமித்திருப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இன்று பிஎச் பாண்டியன் மற்றும் அவர் மகன் மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை இன்னமும் சசிகலா அண்ட் கோ ஆக்கிரமித்திருப்பது குறித்து பிஎச் பாண்டியன் கூறுகையில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா தன் அத்தனை சொத்துகளையும் அதிமுகவுக்கே எழுதி வைத்துள்ளதாக எங்களிடம் கூறினார். தனிப்பட்ட முறையில் அல்ல, பல நிர்வாகிகள் உடனிருக்க அனைவரிடமும் இதைத் தெரிவித்தார்.
ஆனால் இன்று ஜெயலலிதாவுக்குச் சொந்தமான வேதா நிலையத்தை சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். ஜெயலலிதா இறந்த பின்னரும் எந்த அடிப்படையில் சசிகலா அங்கு தங்கியிருக்கிறார்? அவருக்கு என்ன உரிமையிருக்கிறது?
ஜெயலலிதா மறைந்த பிறகு, அந்த வீடு கட்சியின் சொத்து. அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு, ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்த வீட்டை அவரது நினைவில்லமாக்காமல், சசிகலாவே குடியிருப்பது ஏன்? அரவக்குறிச்சி இடைத் தேர்தலுக்கு பயன்படுத்தியதுபோல, அம்மாவின் கைரேகையைப் பயன்படுத்தி அவரது சொத்துகளையும் கபளீகரம் செய்து விட்டார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது,” என்றார்.







