அஸ்வினுக்கு தெண்டுல்கர் பாராட்டு

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் ஆர்.அஸ்வின். நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவரது பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் தொடரில் 27 விக்கெட்டும், இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் தொடரில் 28 விக்கெட்டும் கைப்பற்றி முத்திரை பதித்தார்.

44 டெஸ்டில் 248 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை புரிந்த அவர் வங்காளதேசத்துக்கு எதிராக நடைபெறும் ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் ஆகியவற்றிலும் முத்திரை பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பிரிவில் 30 வயதான அஸ்வினை கிரிக்கெட் சகாப்தமான தெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அஸ்வினின் பந்துவீச்சு அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவரது பந்துவீச்சு மிகுந்த மேம்பாடு அடைந்து காணப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக அவர் மிகவும் நேர்த்தியாக பந்து வீசி வருகிறார். அவர் முழுமையான பவுலராக ஜொலிக்கிறார். ஆட்டத்தை எப்படி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் அவர் அதிகமாக பரிசோதிக்கப்படுவதாக கருதினேன். ஆனால் அவர் தற்போது முதிர்ச்சி அடைந்த சுழற்பந்து வீரராக திகழ்கிறார்.

பந்து வீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அஸ்வின் சிறப்பாக செயல்படுகிறார். அவர் 7 அல்லது 8-வது வீரராக களம் இறங்கி 4 சதம் அடித்து இருக்கிறார்.

தற்போதைய இந்திய அணி சம பலத்துடன் இருக்கிறது. பேட்டிங்கில் அதிக பலத்துடன் இருக்கிறோம். பவுலர்களான அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர்கள்.

சிறப்பாக இருக்கும் இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றி பெறுவது அவசியமான ஒன்றாகும். இதே திறமையை வெளிப்படுத்தினால் வெளிநாட்டிலும் நம்மால் சாதிக்க இயலும்.

இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.

அஸ்வின் கடந்த ஆண்டில் ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.