ஏழைகளின் கரங்களை வலுப்படுத்தும் பட்ஜெட் : பிரதமர் மோடி பெருமிதம்

2017-2018-ம் ஆண்டிற்கான ரெயில்வே பட்ஜெட்டுடன் இணைந்த பொது பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிவடைந்ததும், பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:-
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட், அனைவரின் கனவுகளும் நினைவாகும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை கொண்டுள்ளது. இந்த
பட்ஜெட், சிறு தொழில்களை சர்வதேச சந்தைக்கு எடுத்துச் செல்லும். இதனால் சிறிய தொழில் முனைவோர்களும் பெரிய பலன் அடைவார்கள். இந்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு பாதைகளை ஏற்படுத்தும். ஊழல் மற்றும் கருப்பு பணத்தை நாட்டிலிருந்து முற்றிலும் அகற்ற இந்த பட்ஜெட் வழிவகை செய்கிறது.
மேலும், வீட்டுமனை சந்தைகளுக்கு பெரிய லாபத்தை ஏற்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் வழி செய்யப்பட்டுள்ளது, இதன் காரணமாக வீட்டுமனைகள்
விலை குறையும். இந்த பட்ஜெட்டின் மூலம் கிராமப்புற மக்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் அதிகமாக பயனடைவர். விவசாயிகளின் வருமானத்தை
இரட்டிப்பாக மாற்றுவதே அரசின் முக்கிய நோக்கம். தலித்துக்கள் மற்றும் பழங்குடிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களை அதிகமாக
கொண்டுள்ளது.
ரெயில்வே பட்ஜெட்டை பொருத்த வரை, மொத்த நிதியில் பெரும்பங்கு பயணிகளின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பொது வரவு செலவுத்
திட்டத்தில், ரெயில்வே பட்ஜெட்டை இணைத்தது போக்குவரத்து துறை வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமையும். கடந்த இரண்டரை ஆண்டுகள்
எடுக்கப்பட்ட நடவடிக்கைளால் ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் வளர்ச்சிக்கு இடையே இணைப்பாக இந்த பட்ஜெட் உள்ளது.
மொத்தத்தில், ஏழைகளின் கரங்களை வலுப்படுத்தும் வகையில், உழைப்பை அர்ப்பணித்து நிதியமைச்சர் ஒரு உத்தம பட்ஜெட் அளித்திருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.