உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், ஐ.நா. சபையின் தொடர் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் வடகொரியா அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.
அந்த நாடு அணுகுண்டுகளை ஏந்தி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க தொலைதூர ஏவுகணை சோதனைக்கு தயார் ஆகி வருவதாக சமீபத்தில் அதன் தலைவர் கிம் ஜாங் அன் அறிவித்து, உலக அரங்கை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்தநிலையில் அங்கு யோங்பியான் நகரில் உள்ள அணு உலையை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கையில் வட கொரியா இறங்கி உள்ளது.
இதை வணிக ரீதியிலான செயற்கைக்கோள் ஒன்றின் படம் அம்பலப்படுத்தி உள்ளது.
இந்த உலை, அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படும் புளுட்டோனியம் உற்பத்திக்கு பெயர் பெற்றது. எனவே வடகொரியா தனது அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்ற புளுட்டோனியம் தயாரிப்பில் கவனம் செலுத்தப்போகிறது என்று யூகிக்கப்படுகிறது.
இதுபற்றி வாஷிங்டனின் ‘38 வடகொரியா கண்காணிப்பு திட்ட குழு’ கூறும்போது, “ஜனவரி 22 தேதியன்று கிடைத்துள்ள செயற்கைக்கோள் படங்கள், யோங்பியான் அணு உலை செயல்படப்போவதற்கான அறிகுறிகளை காட்டுகின்றன” என்றது.
இந்த அணு உலையின் செயல்பாடுகள் 2015-ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டன.
மீண்டும் இப்போது இந்த அணு உலை செயல்படப்போவதாக தெரியவந்திருப்பது அண்டை நாடான தென்கொரியாவுக்கு பதற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.







