நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை என டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஊழல்கள் அதிகமாக காணப்படும் நாடுகளின் தரவரிசை பட்டியலை டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016ஆம் ஆண்டில் இலங்கையில் ஊழல் அதிகரித்துள்ளதாக டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் உலக ஊழல் தரவில் 2014ஆம் ஆண்டில் 175 நாடுகளுக்குள் இலங்கைக்கு 85 ஆவது இடம் கிடைத்திருந்தது.
எனினும் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 2015ஆம் ஆண்டில் 168 நாடுகளுக்குள் இலங்கைக்கு 83ஆவது இடமும் 2016 ஆம் ஆண்டில் 175 நாடுகளுக்குள் இலங்கைக்கு 95 ஆவது இடமும் கிடைத்துள்ளன.
இதுதொடர்பில் வீரகேசரி இணையத்தளத்திற்கு கருத்து தெரிவித்த இலங்கையின் டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அசோக ஒபயசேகர,
அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதும் பொதுத்துறையில் ஊழல்கள் குறையவில்லை. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருந்தும் அது சரியான முறையில் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என தெரிவித்தார்.
உலகில் ஊழல் அற்ற நாடுகள் பட்டியலில் டென்மார்க் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. இதேவேளை உலகில் அதிக ஊழல் மிக்க நாடாக சோமாலியா காணப்படுவதாக குறித்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.







