இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா?: இங்கிலாந்துடன் நாளை மோதல்!

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடர் நடந்து வருகிறது.

புனேயில் நடந்த முதல் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 15 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் தொடரையும் கைப்பற்றி விட்டது.

3-வது மற்றும் கடைசி போட்டி நாளை கொல்கத்தாவில் நடக்கிறது. இப்போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா வென்று ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் தொடக்கம் சரியாக அமையாவிட்டாலும் பின்னால் வந்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் போட்டியில் கேப்டன் விராட்கோலி, கேதர் ஜாதவ், 2-வது போட்டியில் டோனி, யுவராஜ்சிங் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.

இதனால் பேட்டிங் வலிமையாக இருக்கிறது. காயம் காரணமாக தொடக்க வீரர் ஷிகர் தவான் நாளை விளையாடுவது சந்தேகம். அவர் விளையாடவில்லை என்றால் ரானே தொடக்க வீரராக களம் இறங்கலாம்.

பந்து வீச்சில் இந்தியா முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். கடந்த 2 போட்டியிலும் இங்கிலாந்து 350 ரன்னுக்கு மேல் குவித்து விட்டது.

இங்கிலாந்து அணியும் பேட்டிங்கில் சிறப்பான நிலையில் உள்ளது. 381 ரன் இலக்கை நோக்கி வந்தே தோற்றது. அந்த அணியில் கேப்டன் மார்கன், ஜேசன் ராய், ஜோரூட், ஜோஸ் பட்லர், மொய்ன் அலி போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அந்த அணியின் பந்து வீச்சும், பாராட்டும்படி இல்லை.

நாளைய போட்டியிலும் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் ஜெயிக்கும் அணி 2-வதாக பேட்டிங் செய்யவே விரும்பும்.

இதில் வென்று ஆறுதல் வெற்றி பெற இங்கிலாந்து முயற்சிக்கும். இதனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.