தாய் தந்தையரின் கல்லறைகளை புனரமைத்த கோத்தா! படையெடுத்த விசாரணைப்பிரிவினர்!

மெதமுலனவில் அமைந்துள்ள மஹிந்தவின் தந்தை “டி.ஏ.ராஜபக்ஸ அருங்காட்சியகம்” மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மற்றும் அரச மதிப்பீட்டு அதிகாரிகள் இணைந்து நேற்று காலை குறித்த பகுதியை சோதனையிட்டுள்ளனர்.

இறுதி மதிப்பீட்டு அறிக்கையை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த தேடுதலை முன்னெடுத்திருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

“வீரகெட்டிய திட்டம்” என்ற பெயரில் திட்டமொன்றை ஆரம்பித்து தமது தாய் தந்தையரான டி.ஏ. ராஜபக்ஸ தம்பதிகளின் கல்லறைகளைப் புனரமைத்தல் மற்றும் அருங்காட்சியகமொன்றை நிர்மாணிப்பதற்காக 9 கோடி ரூபா செலவிடப்பட்டதாக கடந்த காலத்தல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த விசாரணைகளுக்காகவே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்ஸ பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலப்பகுதியில் அந்த அமைச்சுக்கு சொந்தமான காணிகளை நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக குறித்த நிதி ராஜபக்ஸ அமைப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.