இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ரன் குவிக்கும் எந்திரம் என்று அழைக்கப்படும் ஜோ ரூட் இதுவரை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடியதில்லை. இந்த சீசனில் ஐ.பி.எல். போட்டியில் விளையாட வைக்க சில அணி நிர்வாகங்கள் அவரை அணுகின. ஆனால் அவர் மறுத்து விட்டார்.
இது குறித்து 26 வயதான ஜோ ரூட் கூறுகையில், ‘இந்த ஆண்டு தொடர்ச்சியாக நிறைய சர்வதேச போட்டிகள் அதுவும் வெளிநாட்டில் விளையாட வேண்டி உள்ளது. இதனால் குடும்பத்தை விட்டு நீண்ட காலம் பிரிந்து இருக்கும் நிலை ஏற்படும். எனவே ஐ.பி.எல். சமயத்தில் கிடைக்கும் நேரத்தை எங்கள் குடும்பத்தின் புதிய வரவான மகன் ஆல்பிரட்டுடன் செலவிட விரும்புகிறேன்.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதன் மூலம் மிகச்சிறந்த அனுபவம் கிடைக்கும். ஆட்டத்திறனை மேம்படுத்துவதற்கு உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தற்போதைய சூழலில் அந்த சமயத்தில் எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்கு முன்னுரிமை கொடுக்கவே விரும்புகிறேன். அதனால் இந்த முறையும் ஐ.பி.எல். போட்டியில் என்னால் ஆட முடியாது’ என்றார்.