யாழ் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் தினத்தன்னு கொல்லப்பட்ட 12 மாடுகளுக்கும் பட்டிப் பொங்கலுக்கு முன்னர் உரிய நடவடிக்கை எடுக்காது விட்டால் 15ஆம் திகதி காலை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஈழத்து எழுத்தாளரும் ஐக்கிய நாடுகள் உணவு, வேளாண் கழகத்தில் முன்னாள் ஆலோசகருமான மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
யாழில் நித்தம் 200 மாடுகள் களவாடப்படுகின்றன. வீட்டில் கட்டி வைத்துள்ள மாடுகளைக்கூட திருடி திறந்த வெளியில் வைத்து வெட்டிவிடுகின்றனர் என கவலை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வெட்டப்படும் இறைச்சியை சுன்னாகம், யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மல்லாகம், சங்கானை போன்ற சந்தைகளில் விற்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சாவகச்சேரியில் நேற்றய தினமும் மாடுகளை வெட்டி இருக்கிறார்கள். நாவற்குழியில் 12 மாடுகள் ஒரே இடத்தில் வைத்து வெட்டப்பட்டுள்ளது.
அங்கேயே அவற்றின் கொம்புகள் தோல் மற்றும் கழிவுகளை புதைத்துள்ளனர். இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் பல தடவைகள் முறையிட்டிருந்தோம். ஆயினும் எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று 12 மாடுகளும் கொல்லப்பட்டன ஆனால் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்க வில்லை என சுட்டிக்காட்டினார்.
மேலும், பட்டிப் பொங்கலுக்குள் உரிய நடவடிக்கை எடுக்காது விட்டால் 15ஆம் திகதி காலையில் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் முன்பு உண்ணாவிரதம் இருப்போம் என பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம் எனவும் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார்.