“புரளியின் ஓர் ஆரம்பம்” மஹிந்தவின் புதிய திட்டம்..! கவிழ்க்கப்படுமா அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் “புரளியின் ஓர் ஆரம்பம்” என்ற தொனிப்பொருளின் கீழ் மக்கள் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மக்கள் கூட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி நுகேகொடையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்சவின் முஸ்லிம் ஊடக பேச்சாளர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்றைய தினம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நல்லாட்சி அரசு தொடர்பில் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பு மற்றும் மனக்கசப்பினை வெளிப்படுத்தும் முகமாக மக்களை திரட்டுவதற்கு மஹிந்த ராஜபக்சவின் ஆதரவு அணி ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.

கடந்த வாரம் இறுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள கூட்டத்திற்கு ஒரு மக்கள் திரண்டு வருவதற்கு ஏற்பாடகியுள்ளது.

எனவே இந்த அரசாங்கத்தின் மீது அமைச்சர்களும் அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் வெறுப்புக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், அந்த வெறுப்பை வெளிப்படுத்தவும், எதிர்கால முஸ்லிம் நலனுக்காக ஒரு செய்தியைப் பெறுவதற்காக வேண்டியும் இக் கூட்டத்தில் நாட்டின் நாலாபாகங்களிலுமுள்ள முஸ்லிம்கள் திரளாக வர வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுளது.

இதேவேளை, 2017ஆம் ஆண்டு இந்த அரசாங்கத்தை கவிழ்க்க போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்ற நிலையில், அதற்கான அரசியல் காய் நகர்த்தல்களையும் மறைமுகமாக முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையிலேயே மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் “புரளியின் ஓர் ஆரம்பம்” எனும் தொனிப்பொருளில் மக்கள் கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.