அம்மா உணவகத்துக்கு வருது ஆபத்து! அமைச்சரின் தில்லாலங்கடி!

ஏழை, ஏளிய மக்களின் பசியை போக்கும் வகையில், சென்னையில், 2013ல், அம்மா உணவகங்களை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைத்தார்.

ஆரம்பத்தில், 15 உணவகங்கள் திறக்கப்பட்டன; அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், வார்டுகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில், ‘அம்மா’ உணவகங்களின் எண்ணிக்கை படிபடியாக அதிகரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும், ‘அம்மா’ திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதன் மூலம், மொத்தம், 407 ‘அம்மா’ உணவகங்கள், சென்னையில் இயங்கி வருகின்றன. முதல்வர் ஜெயலலிதா மறைவின் போது, தமிழகம் முழுவதும், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அப்போது கூட, ஜெ.,யின் விருப்ப திட்டமான, ‘அம்மா’ உணவகம் மூடப்படாமல், தொடர்ந்து இயங்கியது.

ஜெ.,க்கு அஞ்சலி செலுத்த, ஆயிரக்கணக்கான மக்கள், சென்னைக்கு திரண்டு வந்தனர்; அதனால், தொடர்ந்து ஒரு வாரம், ‘அம்மா’ உணவகங்களில், மூன்று வேளை உணவும் இலவசமாக வழங்கப்பட்டன.

பொதுமக்கள் மத்தியிலும், வேறு மாநிலங்களிலும், பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஜெ., மறைவுக்கு பிறகு, தற்போது நிர்வாக குளறுபடி காரணமாக, உணவகம் நடத்துவதன் மூலம், மாநகராட்சி, ஆண்டுதோறும், 120 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

ஒரு உணவகம் நடத்த, மாதம் ஒன்றுக்கு, மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இதன்படி கணக்கிட்டால், வருவாய், செலவு என, 407 உணவகங்களுக்கும் சேர்த்து, மாநகராட்சிக்கு, ஆண்டிற்கு, 120 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

‘அம்மா’ உணவகங்களின் செயல்பாடுகள் குறித்து, உளவுத்துறை போலீசார் ரகசிய விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர். இதில், தற்போது நடைபெறும் குளறுபடிகள், அரசியல் தலையீடு, மாநகராட்சியின் செயல்பாடு ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டு இருப்பதால், ஊழியர்களும், அம்மா உணவக பணியாளர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முறைகேட்டின் பின்னணியில் அத்துறை அமைச்சரின் தலையீடு இருப்பதால், இந்த விஷயத்தில், எந்த மேல் நடவடிக்கையையும், மாநகராட்சி இதுவரை எடுக்கவில்லை. உளவுத்துறை அறிக்கையில், இந்த விவகாரமும் இடம் பிடித்துள்ளதாக தெரிகிறது.