கோத்தபாயவிற்கும் கைது ஆபத்து..! பின்னணியில் ரணில் மகிந்த கூட்டா? குழப்பத்தில் அரசியல்..!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று கைது செய்யப்பட்டுள்ளமை அரசியல் ரீதியான பழிவாங்கல் என்றே அவர் தரப்பு கூறுகின்றது.

இந்த நிலையில் இந்த கைது அரசியல் ரீதியான ஒரு நாடகமே. இது மகிந்த – ரணில் இணைந்து செயற்படுத்திய நாடகமாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அடுத்து கோத்தபாயவிற்கும் கைது ஆபத்து உள்ளதாகவும் கூறப்படுகின்றது. அரசியல் ரீதியான எதிரிகளாகவே வலம் வருகின்றனர் மகிந்த தரப்பினரும் ரணில் தரப்பினர்களும் என்பது வெளிப்படையாகவே தெரிந்த உண்மை.

இந்த நிலையில் தன்னை கைது செய்ய ரணில் உத்தரவிட்டுள்ளதாக இன்று ஊடகங்களுக்கு தெரிவித்த விமல் வாகன முறைக்கேடு தொடர்பிலேயே தான் கைது செய்யப்படப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் விமல் நிதி மோசடி விசாரணை பிரிவு அலுவலகத்தில் முன்னிலையானதும் இன்று காலை. என்றாலும் இரண்டு நாட்களுக்கு முன்னரே விமல் கைது செய்யப்பட உள்ளார் என மகிந்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி விமலின் கைது ரணிலின் உத்தரவா? அல்லது மகிந்தவின் உத்தரவா என்பதும் சந்தேகமே. அதேபோன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவு எடுக்கும் முடிவுகள் நடைமுறைக்கு வரும் முன்னரே மகிந்த அறிந்து கொண்டது எப்படி?

விமலின் கைதினை முன்னரே அறிந்து கொண்ட மகிந்த தன் புதல்வர் நாமலின் கைதினை முன்னரே அறிந்து கொள்ள முடியவில்லையே.

நாமல் கைது செய்யப்பட்ட போது மகிந்த கூறியது “யாரை எப்போது இந்த நல்லாட்சியும் ரணிலும் கைது செய்வார்கள் என்பது தெரியாது, ரணிலின் இஸ்டம் போலவே நிதி மோசடி விசாரணைப் பிரிவு செயற்பட்டு வருகின்றது” என்பது.

என்றாலும் இப்போது மகிந்தவிற்கு ரணிலின் திட்டம் தெரிந்து போனது எவ்வாறு இந்தக் கேள்விக்கு ரணிலும் மகிந்தவும் மட்டுமே பதில் கூற முடியும்.

முன்னாள் ஜனாதிபதி என்ற செல்வாக்கு அவருக்கு இருக்கின்றது என்றால் நீதியும் கூட அவருக்கு கீழ் படிந்தா நடந்து வருகின்றது என்றும் ஓர் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அரசியல் ரீதியில் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாகவே மகிந்தவும் ரணிலும் இருந்துவரும் நிலை தொடர்ந்து வருகின்றது.

ஆனாலும் இப்போது நடைபெற்ற விமலின் கைது பிரதமரின் திட்டமா அல்லது மகிந்தவின் திட்டமா இல்லை இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகமா என்ற வகையிலும் சிந்திக்கத் தூண்டுவதாக அரசியல் நோக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வாகன முறைக்கேடு தொடர்பில் விமல் கைது செய்யப்பட வேண்டிய அவசியம் இப்போது வந்ததா? நல்லாட்சி வந்ததன் பின்னர் மாதாந்தம் விமல் குறித்த குற்றச்சாட்டுக்காக நிதி மோசடி விசாரணை வந்து சென்றதே அதிகம்.

ஆனால் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார் அதுவும் மகிந்த கூறியதைப்போலவே. இதே வகையிலான கைது ஒன்றே அண்மையில் முன்னாள் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தியின் கைதும் கூட.

இவற்றினை தொகுத்து நோக்கும் போது வெளியில் கீரியும் பாம்புமாக மோதிக் கொள்ளும் ரணில் மைத்திரி மகிந்த கூட்டுச் செயற்பாடுகளையே செய்து வருவதாக கூறப்படுகின்றது.

விமல் இன்று கைது செய்யப்பட உள்ளமை மகிந்த அறிந்திருந்தார். அதேபோன்று கோத்தபாய இன்று அதிகாலை அவசரமாக அமெரிக்காவிற்கு சென்று விட்டார்.

ஏற்கனவே கோத்தபாய லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் விசாரணை செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளி வந்த நிலையிலேயே கோத்தபாய வெளிநாட்டுக்கு பறந்து விட்டார்.

இதன் மூலம் கோத்தபாயவிற்கும் கைது ஆபத்து இருந்து அதன் காரணமாகவே அவர் அவசர வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இவை அனைத்துமே அரசியல் ரீதியான இலாபநோக்கு செயற்பாடுகள் மாத்திரமே எப்படியும் கைது செய்யப்பட்டவர் பிணையில் விரைவில் வெளிவருவார் என்றும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.