சென்னை மராத்தான்: மும்பை வீராங்கனை, கென்யா வீரர் முதலிடம் பிடித்தனர்!

சென்னையில் ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் விப்ரோ நிறுவன ஆதரவுடன் இன்று நடைபெற்ற சென்னை மராத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. முழு மராத்தான், அரை மராத்தான், 10 கிலோமீட்டர் மற்றும் முதியோர் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.
இதில் சுமார் 42.2 கிலோமீட்டர் தூரம் கொண்ட முழு மராத்தான் போட்டியின் ஆண்கள் பிரிவில் கென்யாவை சேர்ந்த ஐசக் கெம்பொய் மற்றும் பெண்கள் பிரிவில் மும்பையை சேர்ந்த சிம்தா ஷர்மா ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.
ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த கெம்பொய் பந்தைய தூரத்தை 02.37.39 நிமிடங்களில் கடந்தார். இவரை தொடர்ந்து நாகேஷ் பவார் இரண்டாவது இடமும், ஜகதீசன் என்ற வீரர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த ஷர்மா 3 மணி நேரம் 34 நிமிடங்களில் பந்தைய தூரத்தை கடந்தார்.
சென்னை மராத்தான் போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு 1.25 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. அரை மராத்தான் போட்டியில் முதல் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.75 ஆயிரம் மற்றும் 10 கிலோமீட்டர் பிரிவில் முதலிடம் பிடித்தவருக்கு ரூ. 35 ஆயிரம் மற்றும் முதியோர் பிரிவில் வென்றவருக்கு ரூ.40 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது.