டோனியின் சாதனையை மற்றவர்கள் எட்டுவது எளிதான காரியம் அல்ல: அஸ்வின் பேட்டி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சென்னையை சேர்ந்த ஆர்.அஸ்வினை, ஐ.டி.டபிள்யூ என்ற விளையாட்டு ஆலோசனை நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.

இந்த ஒப்பந்தம் குறித்து அந்த நிறுவனத்தின் இணை உரிமையாளர் பைரவ் ஷாந்த் கூறுகையில், ‘சர்வதேச கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டதால் ஐ.சி.சி. சார்பில் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை பெற்ற அஸ்வினுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. அவரை விளம்பர தூதராக நியமிக்க பல நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன. இந்த ஆண்டுக்குள் அவர் சுமார் 15 நிறுவனங்களின் விளம்பர தூதராக நியமிக்கப்படுவார். வரும் காலங்களில் அவர் அதிக விளம்பரங்களில் தோன்றும் வீரராக இருப்பார்’ என்றார்.

பின்னர் அஸ்வின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதிய விளம்பர ஒப்பந்தத்தில் இணைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கிரிக்கெட் அகாடமியை கடந்த 6 ஆண்டுகளாக நடத்தி வரும் நான் எனது பெயரில் புதிய அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறேன். இந்த அறக்கட்டளை மூலம் ரத்ததானம், கண்தானம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பு உள்ளிட்ட பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். இது தவிர எங்களது கவனத்துக்கு வரும் சமூக பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன்.

கடந்த ஆண்டு எனக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது. அதேபோல் இந்த ஆண்டும் நன்றாக விளையாட கடினமாக உழைப்பேன். அதற்கான திட்டம் வகுத்து இருக்கிறேன். அதன்படி செயல்பட்டு என்னுடைய இலக்குகளை அடைய முயற்சிப்பேன். எனது பேட்டிங் முன்னேற்றத்துக்கு பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் அளித்த ஆலோசனை உதவிகரமாக இருந்தது. தற்போது நான் சிறப்பாக பந்து வீசி வந்தாலும், இதை என்னுடைய சிறந்த பந்து வீச்சு என்று சொல்லமாட்டேன். என்னுடைய மிகச்சிறந்த ஆட்டம் வெளிப்படும் தருணம் விரைவில் வரலாம்.

கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், அணியில் ஒரு வீரராக டோனி தொடருவார். டோனியின் கிரிக்கெட் வாழ்க்கை அற்புதமானது, ஒப்பிடமுடியாதது. கேப்டன் பதவியில் அவர் தலைசிறந்து விளங்கினார். மற்ற துறையை சேர்ந்த தலைவர்கள் கூட டோனியிடம் இருந்து கற்றுகொள்ள நிறைய விஷயம் இருக்கிறது. டோனிக்கு சமமாக யாரும் செயல்பட முடியுமா?, அவரை போல் கேப்டன் பதவியில் சாதனைகள் படைக்க முடியுமா? என்று கேட்கிறீர்கள். என்னை பொறுத்தமட்டில் அவரை போன்று சாதிப்பது என்பது இமாலய இலக்காகும். நிச்சயமாக அதனை எட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல.

டோனியின் இடத்தை நிரப்ப யாராவது ஒருவர் வருவார்கள். விராட் கோலியை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த ஒரு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் விராட்கோலியின் செயல்பாடுகளை பார்த்தால் அவர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியின் கேப்டன் பதவியையும் ஏற்க தகுதியான நபர் என்பது தெரியும். இதனை அறிந்து தான் டோனியும் கேப்டன் பதவியை துறந்து இருப்பார் என்று கருதுகிறேன். கேப்டன் பதவியில் இருந்து விலகியது டோனியின் தனிப்பட்ட முடிவு. தனிப்பட்ட முடிவுகளில் நாம் எப்பொழுதும் அதிக உணர்ச்சியை வெளிப்படுத்துகிறோம். டோனியின் தனிப்பட்ட முடிவை நாம் மதிக்க வேண்டும்.

இவ்வாறு அஸ்வின் கூறினார்.

டுவிட்டரில் நீங்கள் நன்றாக கலாய்க்கிறீர்களே? அதற்காக பிரத்யேக பயிற்சி எதுவும் எடுத்து இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு அஸ்வின் பதிலளிக்கையில், ‘நான் கொஞ்சம் குசும்புக்காரன். படங்களில் காமெடி காட்சிகளை ரசித்து பார்க்கும் பழக்கம் உடையவன். என்னை யாரும் சீண்டினால் அவர்களுக்கு நக்கலாக பதில் சொல்வது எனது பாணியாகும். அதனை தான் டுவிட்டரிலும் கடைப்பிடிக்கிறேன்’ என்றார்.