பரிசு பெற்றுத் தருவதாக கூறி இலங்கைப் பெண்ணை ஏமாற்ற முயற்சித்த நைஜீரிய பிரஜை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் இருந்து 3500 ஸ்டேர்லிங் பவுண் பெறுமதியான கிறிஸ்மஸ் பரிசுப் பொதி கொள்வனவு செய்து தருவதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த நைஜீரிய பிரஜை தபால் நிலையத்தில் இருந்து கிறிஸ்மஸ் பரிசுப் பொதியை எடுத்து வருவதற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் தருமாறு குறித்த பெண்ணிடம் கோரியுள்ளார்.
இந்நிலையில் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் 5 லட்சம் ரூபா மேலதிகமாக வேண்டும் என குறித்த பிரஜை திடீரென பெண்ணிற்கு அழைப்பினை மேற்கொண்டுள்ளார்.
நைஜீரிய பிரஜை, தன்னை ஏமாற்றுகின்றார் என்று தெரிந்து கொண்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
கம்பஹா மற்றும் கொஹூவல பிரதேசங்களில் 11 இலட்சம் பணம் மோசடி செய்து தப்பிச் சென்ற நபரே குறித்த நைஜீரிய பிரஜை என விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, லண்டனை சேர்ந்த மற்றுமொரு நபரும் இந்த ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார் என தகவல் தெரிவிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நைஜீரிய பிரஜையின் விசா காலம் நிறைவடைந்த நிலையில் அவர் நுகேகொட பகுதியில் தலைமறைவாக இருந்துள்ளார்.
குறித்த பெண்ணின் முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் சந்தேகநபரை இந்த மாதம் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளுமாறும், மற்றைய சந்தேகநபரை கைது செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் நீதவான் இதன் போது பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
லண்டனை சேர்ந்த மற்றைய சந்தேகநபர் கொழும்பில் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.