63% அதிமுக தொண்டர்கள் சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு: போயஸ் கார்டனை அலறவைத்த நக்கீரன் சர்வே

அதிமுக தொண்டர்களில் 63% சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நக்கீரன் வெளியிட்ட சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலர் பதவியை சசிகலா கைப்பற்றியுள்ளார். அடுத்ததாக முதல்வர் பதவியையும் கபளீகரம் செய்ய சசிகலா முயற்சித்து வருகிறார்.

இந்த நிலையில் சசிகலா தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள், பொதுமக்களிடையே நக்கீரன் வார இதழ் சர்வே ஒன்றை எடுத்துள்ளது. அதில் சசிகலா பொதுச்செயலர் ஆனது தொடர்பாக அதிமுக தொண்டர்கள் தெரிவித்த கருத்துகள்:

எதிர்ப்பு
அதிமுக தொண்டர்களில் 63% பேர் சசிகலா பொதுச்செயலர் ஆனதை எதிர்க்கிறார்கள். வெறும் 27% பேர்தான் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 10% கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

சசிகலாவரை வரவேற்க காரணம்
சசிகலாவை வரவேற்கும் 27% தொண்டர்களில் 10% ஜெயலலிதாவின் வெற்றிடத்தை நிரப்புவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்; 8% எதிர்க்கட்சிகளிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றுவார்; 18% ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர் என தெரிவித்துள்ளனர்.

வேறு தலைவர்கள் இல்லை..
சசிகலாவை வரவேற்கும் 27% பேரில் 20% வேறு தலைவர்கள் அதிமுகவில் இல்லை என்றும் 25% ஆட்சி நிலைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

சசிகலாவை எதிர்க்க காரணம்?
சசிகலாவை எதிர்க்கும் 63% பேரில் 26% ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர் என்பதால் எதிர்ப்பதாக கூறியுள்ளனர். 22% ஜெயலலிதாவுக்கு இணையானவர் அல்ல சசிகலா என கூறியுள்ளனர்.

சாதி ஆதிக்கம்…
மேலும் சசிகலா பொதுச்செயலரானதால் 10% சாதி ஆதிக்கம் அதிகமாகும் எனவும் 13% ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வர வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். 8% பேர் ஓபிஎஸ் போன்ற தலைவர்கள் வர வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இரட்டை இலைக்கு வாக்கு இல்லை
சசிகலா பொதுச்செயலரான நிலையில் தேர்தல் வந்தால் இரட்டை இலைக்கு வாக்களிக்கமாட்டோம் என அதிமுக தொண்டர்களில் 52% பேர் கூறியுள்ளனர். 37% பேர் இரட்டை இலைக்கு வாக்களிப்போம் என தெரிவித்துள்ளனர்.