யாழில் தாய் மற்றும் மகன் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு : சிக்கலில் சிக்கியுள்ள புலனாய்வாளர்…!

பொலிஸ் புலனாய்வாளர் ஒருவருக்கு எதிராக யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் தாய் மற்றும் மகன் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

யாழ்.பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் உள்ள புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் 45 வயது மதிக்கத் தக்க புலனாய்வாளருக்கு எதிராகவே முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

யாழ். நகர் முனியப்பர் வீதியில் உள்ள (பேமன்ட்) விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் இளைஞரை கடையில் நின்ற போது மதுபோதையில் சென்று சந்தேகத்தின் பேரில் கைதுசெய்வதாக கூறி நேற்று (03) அழைத்துச் சென்றுள்ளார்.

அழைத்துச் சென்றவர் யாழ்.பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் குறித்த இளைஞரை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் தான் திரும்பி வருவதாகவும் கூறிச் சென்றுள்ளார்.

குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டமை குறித்து இளைஞரின் தாயாருக்கு கடை உரிமையாளர் அறிவித்துள்ளார்.

இளைஞரின் தாயார் பொலிஸ் நிலையத்திற்கு வந்து ஏன் தனது மகனை கைதுசெய்து கொண்டு வந்ததாக கேட்ட போது, புலனாய்வாளர் தான் கைதுசெய்துகொண்டு தன்னிடம் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கூறியதாக பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், குறித்த இளைஞரிடம் தாயாரின் தொலைபேசி இலக்கத்தினைத் தருமாறு குறித்த புலனாய்வாளர் கேட்டு வந்ததாகவும், இளைஞர் மறுத்ததை தொடர்ந்தே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட இளைஞரின் தாயார் மற்றும் இளைஞர் யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய புலனாய்வாளர், இவ்வாறு பல பெண்களின் தொலைபேசி இலக்கங்களை கேட்டு பல அவதூறான நடத்தைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்றைய சம்பவத்தின் பின்னர், பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த புலனாய்வாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் முன்னிலையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.