பொதுபல சேனா மற்றும் பொது எதிரணி எம்பிகளான உதய கம்மன் பில, விமல் வீரவன்ச ஆகியோருக்கும் எமக்கு மிடையில் இரகசிய உடன்படிக்கை உள்ளது என்றும் நள்ளிரவில் நாம் சந்தித்து உரையாடுகிறோம் என்றும் நண்பர் அமைச்சர் டிலான் பெரேரா கூறியுள்ளார்.
இது இன்றுடன் முடியும் இந்த ஆண்டின் மிகப்பெரும் நகைச்சுவை 2016-ம் ஆண்டின் மிகச்சிறந்த சிரிப்பு அமைச்சர் என்ற பட்டத்தை நண்பர் டிலான் பெரேராவுக்கு நான் வழங்குகிறேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழி கள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
கடந்த 28ஆம் திகதி நடைபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊடக மாநாட்டில் அமைச்சர் டிலான் பெரேரா பற்றி அமைச்சர்கள் மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் தெரிவித்த கருத்துகளுக்கு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்த பதில் கருத்து பற்றி அமைச்சர் மனோ கணேசன் கூறுகையில்,
நள்ளிரவில் நான் என்ன செய்கிறேன் யாருடன் உரையாடுகிறேன் என்பவை பற்றியெல்லாம் நண்பர் டிலான் தெரிந்து வைத்திருப்பதாக சொல்வது சுவாரசியமானது. நள்ளிரவில் என்னை தேடுவதை நிறுத்திவிட்டு நண்பர் டிலான் நமது நல்லாட்சி அரசை பாதுகாக்கும் கடமையை கரிசனையுடன் ஆற்ற வேண்டும்.
“டீல்” பற்றி தொடர்ச்சியாக நண்பர் டிலான் தான் பேசி வருகிறார். பசில் ராஜபக்சவுக்கும் ஐ.தே.கவுக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை இருக்குமானால் அதை ஆவணங்களுடன் வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு டிலானுக்குதான் இருக்கிறது. அவர் இந்த பசில்-ஐ.தே.க இரகசிய தொடர்பு பற்றி பேசிக் கொண்டுமறைமுகமாக இந்த அரசுக்குள் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயல்கிறார். இதைத்தான் பொது பல சேனா மற்றும் பொது எதிரணி எம்.பிக்கள் உதய கம் மன்பில, விமல் வீரவன்ச போன்றோரும் செய்கிறார்கள். ஆகவே தான் இந்த சந்தேகம் எமக்கு ஏற்பட்டது. அதைத்தான் நான் சொன்னேன்.
தமிழ் முற்போக்கு கூட்டணியை பொறுத்த வரையில் ஐ.தே.க ஆட்சி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சி என்பவைகளை விட தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதுவே முக்கியமானது. ஆகவே அதற்காக புதிய அரசியலமைப்பு வரும்வரையிலாவது தேசிய அரசு இருக்க வேண்டும். அதன்பிறகு வேண்டுமானால்போய் தனித்தனி அரசுகளை அமையுங்கள்.
நண்பர் டிலான் அரசியலமைப்பு வழிகாட் டல் குழுவில் என்னுடன் இருக்கிறார். ஆகவே அங்கே என்ன நடக்கிறது என்பது பற்றி அவர் சிங்கள மக்களுக்கு எடுத்து சொல்லி இந்த அரசை காப்பாற்ற வேண்டும். அதை விடுத்து அவரும்பொதுபல சேனா மற்றும் பொது எதிரணி எம்.பிக்கள் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரை போல் இந்த அரசை வீழ்த்த நினைத்தால்எவருக்கும் அவரைப் பற்றி சந்தேகம் வரத்தானே செய்யும். ஆகவே தான் “டீல் டிலான்” இல்லை என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் அவர்தான் இருக்கிறார் என மனோ கணேசன் கருத்து தெரிவித்தார்.







